இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி-20 தொடரான 2019-ஆம் ஆண்டின் ‘சையது முஷ்தாக் அலி’ கோப்பை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் வலுவான மும்பை அணியை எதிர்த்து சிக்கிம் அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ‘அஜிங்கிய ரஹானே’ முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ‘ரஹானே’ மற்றும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இளம் வீரர் ‘பிரித்வி ஷா’ களமிறங்கினர். ஆனால் மும்பைக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ரஹானே 11 ரன்களிலும், பிரித்வி ஷா 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
22 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதால் சிக்கிம் அணி வீரர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். ஆனால் அடுத்து நடக்கவிருந்த பயங்கரத்தை அப்போது அவர்கள் உணர வாய்ப்பில்லை. அடுத்ததாக களமிறங்கினார் மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ‘ஸ்ரேயாஸ் அய்யர்’. களம் இறங்கியது முதல் சிக்கிம் வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி ரன்கள் சேர்த்தார்.
இவருக்கு உறுதுணையாக ‘சூர்யகுமார் யாதவ்’ அபார ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இவர்களின் ஆக்ரோஷத்தை தடுக்கமுடியாமல் சிக்கிம் அணி கேப்டன் திணறினார்.
இந்த நேரத்தில் சிக்கிம் அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ‘டாஷி பின்ட்சோ’ ஸ்ரேயாஸ் அய்யரிடம் வசமாக மாட்டிக் கொண்டார். இவரின் ஒரே ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் 35 ரன்களை விளாசி மிரள வைத்தார். தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 38 பந்துகளில் சதத்தை எட்டினார்.
சதமடித்த பிறகும் ‘ஸ்ரேயாஸ் அய்யர்’ சிக்கிம் பவுலர்களை தொடர்ந்து பந்தாடினார். இவருக்கு உறுதுணையாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஒருவழியாக ஸ்ரேயாஸ் அய்யரின் இந்த ஆக்ரோஷ ஆட்டத்திற்கு ‘மிலிந்த் குமார்’ முடிவு கட்டினார். அவரது பந்துவீச்சில் 55 பந்துகளில் 147 ரன்கள் குவித்து ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார்.
இவரது இரக்கமில்லாத இந்த இன்னிங்சினால் மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 267.27 ஆகும்.
இந்த அபார இன்னிங்சின் மூலம் ‘ஸ்ரேயாஸ் அய்யர்’ ஒரு இந்திய வீரரின் தனிப்பட்ட டி-20 அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதற்கு முன்பாக கடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ‘ரிஷாப் பாண்ட்’ குவித்த 128* ரன்களே சாதனையாக இருந்தது. அதனை இன்று ஸ்ரேயாஸ் அய்யர் முறியடித்தார்.
மேலும் இன்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் மொத்தம் 15 சிக்சர்களை நொறுக்கி தள்ளினார். இதற்கு முன்பாக ‘முரளி விஜய்’ 11 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது அதனை இன்று ஸ்ரேயாஸ் அய்யர் முறியடித்துள்ளார்.
259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்குடன் களமிறங்கிய சிக்கிம் அணி மும்பை வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் மும்பை அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசித்தது.
இன்றைய அபார ஆட்டத்தின் மூலம் ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய தேர்வுக் குழு உறுப்பினர்களை நிச்சயம் திரும்பி பார்க்க வைத்திருப்பார். எனவே கூடிய விரைவில் இதுபோன்ற ஒரு இன்னிங்சை இந்திய அணிக்காக இவர் ஆடுவார் என எதிர்பார்க்கலாம்.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்.