நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் T20 தொடருக்காக இளம் வீரர் ஷுப்மான் கில் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடர் நேப்பியரில் வரும் ஜனவரி 23 முதல் தொடங்குகிறது. ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
யார் இந்த ஷுப்மான் கில்? ஷுப்மான் கில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை .
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று T20I களுக்கான இந்திய அணியில் ஷுப்மான் கில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இது அவர் விளையாடும் முதல் போட்டித்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த U 19 உலகக் கோப்பையில் பிரிதிவி ஷா தலைமையில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வலதுகை ஆட்டக்காரர் ஆவார். இந்திய அணிக்குத் தேவையான இளம் வீரர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார்.
36 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சராசரியாக 47.78 ரன்கள் எடுத்து உள்ளார். மேலும் ஒன்பது முதல் தர வகுப்பு ஆட்டங்களில் 1089 ரன்கள் அடித்துள்ளார். இதன் சராசரி 77.78 ஆகும்.
மூன்றாவது U-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒருவராக இடம் பெற்றிருந்தார் கில். அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் 124 என்ற அதிகபட்ச சராசரியுடன் 372 ரன்கள் குவித்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் அவர் அடித்த சதமானது இந்திய வெற்றி பெற உதவியதுடன் எதிரணி வீரர்கள் கூட பாராட்டும் படியாக அமைந்தது. அந்த போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 272/9 ரன்கள் எடுத்து மட்டும் அல்லாமல் பாகிஸ்தானை வெறும் 69 ரன்களுக்கு சுருட்டி இமாலய வெற்றியை பெற்றது.
அந்த அணியில் இடம் பெற்றிருந்த மூன்று முக்கிய வீரர்களில் ஒருவரான அவர் பிருத்வி ஷா மற்றும் ஷிவாம் மாவி ஆகியோருடன் அடுத்த பெரிய சக்தியாகவே கருதப்பட்டார். இதில் பிருத்வி ஷா ஏற்கனவே இந்தியாவிற்காக விளையாடினார். அதே நேரத்தில் கில் இத்தொடரில் ஜொலித்தால் உலக கோப்பைக்கான பட்டியலில் இடம்பெறுவதிலும் சந்தேகம் இல்லை.
கடந்த ஐபிஎல் 2018 ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி டேர்டெவில்ஸ் ஆகியவை அவரை வாங்க போட்டி போட்டாலும் இறுதியில் கே.கே.ஆர் இறுதி முயற்சி செய்து ரூ 1.80 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது. அவர் 11 இன்னிங்சில் விளையாடிய அவர் 203 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 146.04 ஆக இருந்தது.அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்து உள்ளார்.
ரஞ்சி டிராபி சீசனில் விளையாடிய கில் 728 ரன்கள் எடுத்துள்ளார். அதிக பட்சமாக தமிழ் நாட்டிற்கு எதிராக 268 ரன்கள் எடுத்தார். 20 வயதே ஆகும் கில் சமீபத்தில் யுவராஜ் சிங்கிடம் இருந்து பாராட்டுகளை பெற்று இருந்தார்.
இந்திய அணிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டிருப்பதின் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாகவும் தனது பெயரை பரிசீலனை செய்ததற்காக பிசிசிஐ க்கு தனது நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார் கில். இது தனது கேரியரில் முக்கிய தருணம் என்றும் கூறியுள்ளார் ஸுப்மன் கில்.