பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ள நிலையில், அணி நிர்வாகங்கள் தங்களது அணியை தயார் செய்ய தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி நிர்வாகமும் அணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் மயான்க் மார்கண்டே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஷெர்பேன் ரூதர்போர்ட், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் தேர்வு செய்யப்பட்டார், இதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் தேர்வு செய்யப்பட்டார்.
பெங்களூர் அணியில் ஏற்பட்ட மாற்றங்கள்:
இதுவரை பெங்களூர் அணிக்கு ஐபிஎல் கோப்பை எட்டாக்கனியாகவே உள்ளது. சிறந்த வீரர்களை வைத்திருந்தாலும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. மேற்குறிப்பிட்டதை போல, பெங்களூர் நிர்வாகமும் தங்களது அணியில் இரண்டு மாற்றங்களை செய்துள்ளது.
2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டின், கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக திகழ்ந்தார். அணி நிர்வாகம் தற்போது அவரை நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான சைமன் காட்டிச்சை ஆர்சிபி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆவதற்கு விண்ணப்பித்திருந்த மைக் எசான் , பெங்களூர் அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்.சி.பி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஆஷிஷ் நெஹ்ராவும் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளார்.
ஆர்.சி.பி அணியின் சேர்மேன் சஞ்சீவ் கூறியதாவது ;
”ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மரியாதைக்குரிய மிகவும் நம்பகத்தற்கு உரிய அணியாகும். ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு வரும் அணியாகும். தொடர்ந்து விடாமுயற்சியுடன் உள்ள ஆர்.சி.பி அணியை சேர்ந்த ஒவ்வொருவரும் மேலும் சிறப்பாக செயல்பட காத்திருக்கின்றோம். இந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக அணியில் மைக் எசான் மற்றும் சைமன் காட்டிச் ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மைக் எசான் அணியை சிறப்பாக கட்டமைப்பார் என நம்புகிறேன். சைமன் அவர்களின் அனுபவம் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு வித்திடும் என பெரிதும் நம்புகிறேன்.” ,
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
"ஆர்.சி.பி அணி மீண்டும் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆதலால், ஒற்றை பயிற்சியாளரை கொண்டு நகர இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளாக ஆர்.சி.பி அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டின் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்.சி.பி அணிக்கான அவர்களின் பங்களிப்பு பெரியது. இளம் வீரர்கள் திறமையாக செயல்பட அவர்கள் பெரிதும் உதவியுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ”
ஆர்.சி.பி அணி 2017ஆம் ஆண்டிற்குப் பின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் பயிற்சியாளர்கள் தொடர் தோல்விகள் காரணமாக பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.அணியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களால், பெங்களூரு அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.