IPL T20 லீக், உலகின் பல நாடுகளில் தொடங்கப்பட்ட உள்ளூர் T20 தொடருக்கு சவாலான ஒரு தொடர். வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் இருந்து முண்ணனி வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பது இதன் கூடுதல் அம்சம். இளம் இந்திய வீரர்கள் சர்வதேச அணியில் இடம் பிடிக்க IPL போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் போதும் என்ற எண்ணம் உருவானது.
அவ்வாறு குறிப்பிட்டு பார்த்தால் பும்ராஹ், ப்ரகியான் ஓஜா, பாண்டியா சகோதரர்கள், யூசுப் பதான் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வீரர்கள் எல்லாம் IPL போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பின் இந்திய சர்வதேச அணியில் இடம் பிடித்து சாதித்து காட்டியவர்கள். ஆனால் எல்லா வீரர்களையும் அப்படி கூற முடியாது. IPL மற்றும் ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக செயல் பட்டு அணியில் இடம் கிடைக்காதவர்களும் உள்ளனர். இதற்கு அதிர்ஷடமும் காரணம் என்றே கூறலாம். சிலர் ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும் IPL அணிகளில் கூட இடம் கிடைக்காதவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு ஒரு 6 இந்திய வீரர்களை பின் வரும் தொகுப்பில் காணலாம்.
#6 ரஜ்னீஷ் குர்பானி

ரஜ்னீஷ் குர்பானி, வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் விதர்பா அணிக்காக ரஞ்சி போட்டிகளில் பங்கேற்கக் கூடியவர். 2017-18 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி தொடரின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். 6 போட்டிகளில் பங்கேற்ற இவர், 39 விக்கெட்களை சாய்த்தார்.
அந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய விதர்பா அணி, இவரது சிறந்த பந்து வீச்சால் முதன் முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் ஹாட்-ட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். இருந்தும் 2018 ஆம் ஆண்டு IPL தொடருக்கான ஏலத்தில் விலை போகவில்லை. ஆனால் தற்போது நியூஸிலாந்து சென்றுள்ள இந்தியா A அணியில் இடம் பிடித்துள்ளார்.
#5 பாபா இந்திரஜித்

பாபா இந்திரஜித், பாபா அபராஜித் இருவரும் இரட்டை சகோதரர்கள். இருவருமே கிரிக்கெட்டர் என்பதால் இருவர் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இருவரிடமும் நல்ல திறமைகள் உள்ளன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திரஜித் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தை சேர்ந்த இவர், ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் தமிழ்நாட்டிற்காக களம் இறக்கப்பட்டார். ரஞ்சி மற்றும் முதல் தர (First Class) போட்டிகளில் தனது சராசரியாக 48 ரன்கள் வைத்துள்ளார்.
24 வயதே ஆன இந்திரஜித் தனது ஸ்ட்ரைக் ரேட்டாக 96 ரன்கள் வைத்துள்ளார். இது இவரால் வேகமாக ரன் சேர்க்க முடியும் என்பதை காட்டுகிறது. இவ்வருடம் நடைபெற்ற துலீப் ட்ரோபியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 2018-19 ஆண்டிற்கான ரஞ்சி தொடரில் தமிழக கேப்டனாக அறிவிக்கப்பட்டார். நல்ல திறமை இருந்தும் வாய்ப்பிற்காக காத்திருக்கும் இவர் வரும் IPL ஏலத்தில் விலைபோவாரா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.
# 4 ஜலஜ் சக்சேனா

உள்ளூர் போட்டிகளில் மிகவும் பரிட்சயமான முகம் என்றால் அது ஜலஜ் சக்சேனா அவர்கள் தான். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வரும் சக்சேனா இதுவரை ஒரு IPL போட்டியில் கூட விளையாடாமல் இருப்பது பெரும் ஆச்சரியம் தான். ஆல் ரவுண்டரான இவர், பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் தொடர்ந்து நல்ல திறனை வெளிப்படுத்தி வருகிறார். 31 வயதான ஜலஜ் சக்சேனா கடந்த நான்கு வருடத்தில் 4 முறை BCCI விருதை பெற்றுள்ளார். 2013ம் ஆண்டு மும்பை அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட சக்சேனா இரண்டு வருடம் ஒரு போட்டியில் கூட இடம் கிடைக்காமல் வெளியில் இருந்தார்.
அதற்கு அடுத்த வருடம் பெங்களூரு அணியில் இடம் பிடித்த இவர், அங்கேயும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இவரை யாரும் ஏலத்தில் வாங்க முன் வரவில்லை. 30 வயதை தாண்டியதால், இதற்கு மேல் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறி.
#3 பாபா அபராஜித்

19 வயத்திற்குற்பட்ட வீரர்களுக்கான உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த பாபா அபராஜித், தனது திறமையை உலகறிய செய்தார். நல்ல ஆல் ரவுண்டரான இவர், 2012 ஆம் ஆண்டின் U19 உலகக்கோப்பையில் காலிறுதி மற்றும் அரை இறுதி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இத்தொடரில் மொத்தம் 5 விக்கெட் மற்றும் 171 ரன்களை குவித்தார்.
2013ம் ஆண்டு சென்னை அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட அபராஜித், மூன்று வருடத்தில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே அமர்ந்திருந்தார். பின் புனே அணியால் 2016ம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், அங்கேயும் தனக்கான வாய்ப்பு கிடைக்காமல் வெளியே இருந்தார். 2018ம் ஆண்டிற்கான ஏலத்தில் இவரை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. 24 வயதே ஆன வீரர் என்பதால் இவ்வருடம் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்துப்பார்ப்போம்.
#2 நவ்தீப் சைனி

பத்து ஆண்டிற்கு முன் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணி திணறியது. ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக உள்ளது. அளவுக்கு அதிகமாகவே நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். அனைவருமே சிறப்பாக செயல் படுவதால் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலே போகிறது. அப்படி குறிப்பிட்டு சொல்லப்போனால், நவ்தீப் சைனியும் அதிலே அடங்குவார்.
டெல்லியை சேர்ந்த வலது கை பந்து வீச்சாளரான இவர், 2017 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கான ரஞ்சி அணியில் இடம் பிடித்தார். இளம் வீரரான இவர் அத்தொடரில் 34 விக்கெட்களை சாய்த்து அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். பின்பு 2018-19 ஆண்டிற்கான விஜய் ஹசாரே கோப்பையில் 16 விக்கெட்களை சாய்த்தார். 2017 ஆம் ஆண்டு டெல்லி அணியால் 10 இலட்சம் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார். சென்ற வருடம் பெங்களூரு அணி இவரை 3 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்து ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கவில்லை.
இவ்வருடம் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 15 பேரில் ஒருவராக இடம் பிடித்தார். 2019 ஆம் ஆண்டிற்கான IPL போட்டிக்கு பெங்களூரு அணி இவரை தேர்வு செய்துள்ளது. ஆனால் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை அவரைப்போல் நாமும் எதிர்ப்பாப்போம்.
#1 சித்தேஷ் லட்

வாசிம் ஜாபருக்கு பிறகு மும்பை ரஞ்சி அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சித்தேஷ் லட் என்றே கூறலாம். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், 2013 ஆம் ஆண்டு மும்பை அணிக்கு அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை அணியின் வெற்றிக்கு இவரது பங்கு பெரிது. நல்ல கவனத்துடன் பொறுமையாக ஆடக்கூடிய வலது கை பேட்ஸ்மேனான இவர், தற்போது நடந்துக் கொண்டிருக்கும் ரஞ்சி வரை அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். இருப்பினும் இவருக்கு ஒரு IPL போட்டி வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.
2015 ஆண்டு முதன் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார் லட். தொடர்ந்து இவரை அந்த அணி தக்கவைத்துக்கொண்டு வருகிறது. அடுத்த வருடத்திற்கான அணியிலும் இவர் இடம் பெற்றுள்ளார். இருப்பினும் வாய்ப்பு கிடைக்காமல் தொடர்ந்து வெளியில் உள்ளார். 26 வயதே ஆன இவர், IPL போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் திறமையை வெளிப்படுத்த காத்துக்கொண்டிருக்கிறார்.