உலககோப்பை தொடரானது இங்கிலாந்து நாட்டில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி கிட்டதட்ட லீக் சுற்று முடிவடையும் தருணத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், தென்னாப்ரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தொடர் தோல்வி காரணமாக தங்களது அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி மட்டும் அரையிறுதி வாய்ப்பை உறுதி சேய்துள்ளது. அதுபோக இந்தியா, நியூசிலாந்து அணிகள் கிட்டத்தட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுள் ஏதேனும் ஒரு அணி மட்டுமே தகுதி பெறும் நிலையில் உள்ளது. இந்த வேளையில் இன்று சீஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன் படி கருணத்னே மற்றும் குசால் பெரேரா அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் இணைந்து இலங்கை அணிக்கு நல்ல துவக்கத்தை தந்தனர். கருணத்னே நிதானமாக ஆட மறுமுனையில் குசால் பேரேரா அதிரடியாக ஆடினார். இதனால் ரன் வீதமானது குறையாமல் அதிகரித்து கொண்டே இருந்தது. கருணத்னே 32 ரன்களில் இருந்தபோது ஹோல்டர் பந்தில் ஹோப் இடம் கேட்ச் ஆனார். அதன் பின்னர் அவிஷ்கா பெர்னால்டோ களமிறங்கினர். இளம் வீரரான இவர் குசால் பெரேரா உடன் இணைந்து ஆடத் துவங்கினார். அரைசதத்தை கடந்த குசால் பெரேரா 64 ரன்களில் இருந்த போது ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த குசால் மெண்டிஸ் பெர்னால்டோ உடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தார். இந்த ஜோடி தேவைப்படும் பந்துகளை பவுண்டரிகளாக விளாசியும் அவ்வப்போது ரன்கள் ஓடியும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். சிறப்பாக ஆடி வந்த பெர்னால்டோ அரை சதத்தை கடந்தார். அணியின் ஸாகோர் 189 ஆக இருக்கும் போது குசால் மெண்டிஸ் 39 ரன்களில் ஆலன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய அணியின் மூத்த வீரரான மேத்யூஸ் ஆரம்பம் முதலே ஆதிரடியாக ஆடத்துவங்கினார்.
இவர்களும் இணைந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். இந்த ஜோடி நான்காம் விக்கெட்டுக்கு 57 ரன்கள் குவித்தனர். அப்போது மேத்யூஸ் 26 ரன்கள் ஹோல்டர் பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த அவிஷ்கா பெர்னால்டோ சர்வதேச அரங்கில் தனது முதலாவது சதத்தினை பதிவு செய்தார். சதமடித்து சில நிமிடங்களிலே இவரும் ஆட்டமிழக்க இறுதியில் திரிமண்னேவின் அதிரடியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 338 ரன்கள் குலித்தது.