பின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் சார்பில் கிரிஸ் கெயில் மற்றும் அம்பிரிஷ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்களுக்கு துவக்கமே சரியாக அமையவில்லை. மூன்றாவது ஓவரிலேயே மலிங்கா வீசிய பந்தில் அம்பிரிஷ் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் ஹோப்-ம் நிலைத்து ஆடவில்லை. மலிங்காவின் பந்திற்கு அவரும் இறையாகினார். 5 ரன்களிலே அவரும் பெவிலியன் திரும்பினார். பின் களமிறங்கிய அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹெட்மேயர் கெயிலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட் இழப்பை சற்று தடுத்து நிறுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 49 ரன்கள் குவித்தது. அப்போது கெயில் 35 ரன்களில் ராஜிதா பந்தில் ஆட்டமிழக்க ஹெட்மேயரும் 29 ரன்களில் ரன் அவுட்டானார்.
அடுத்து வந்த பூரன் அணியின் நிலை உணர்ந்து வெற்றி இலக்கை துரத்த துவங்கினார். ஒருபுறம் இவர் சிறப்பாக ஆடிவர மறுபுறம் ஹோல்டர், ப்ராத்வேட் என அடுத்தடுத்து விக்கெட்டுகளும் விழுந்தன. இருந்த போதும் பூரன் தனது அதிரடியை காட்டி சதத்தினை கடந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஆலன் அரைசதத்தையும் கடந்தார். இந்த ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியது. ஆனால் இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டுகளை இழக்க அடுத்து வந்த வீரர்கள் யாரும் சோபிக்காததால் இறுதியில் 50 ஓவர் முடிவில் அந்த அணியால் 315 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. எனவே இலங்கை அணி இந்த போட்டியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்திய அவிஷ்கா பெர்னால்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.