உலககோப்பை தொடர் தற்போது கிட்டத்தட்ட லீக் போட்டிகள் இறுதி நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதுவரை வந்த முடிவு படி ஆஸ்திரேலிய அணி மட்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. அதுபோல ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்ரிக்க மற்றும் மேற்கிந்திய தீீவுகள் அணிகள் தொடர் தோல்வி மற்றும் மோசமான ஆட்டத்தால் தங்களது அரையிறுதி வாய்ப்புகனை இழந்துவிட்டன. அதுபோக மற்ற அணிகள் அனைத்தும் அடுத்த மூன்று இடங்களுக்காக போராடி வருகின்றன. இதில் தென்னாப்ரிக்க அணி கேப்டன் டூ பிளசிஸ் தங்களது அணி இந்த உலககோப்பை தொடரில் லீக் போட்டிகளிலேயே வெளியேறியதற்கு ஐபிஎல் தொடர் தான் காரணம்.என்ற சர்ச்சையான கருத்தினையும் முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஏபி டிவில்லியர்ஸ்-ன் உலககோப்பை விண்ணப்பத்தை தென்னாப்ரிக்க அணி நிர்வாகம் நிராகரித்ததும் இந்த தேல்விக்கு காரணம் எனவும் ஒருபுறம் சர்ச்சைகள் எழுந்தன. இலங்கை அணிக்கு இது மிகவும் முக்கியமான போட்டி. இதில் அந்த அணி தோல்வியடையும் பட்சத்தில் அந்த அணிக்கும் தென்னாப்ரிக்க அணியின் கதிதான். எனவே இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த போட்டியானது இங்கிலாந்து நாட்டின் சீஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி கேப்டன் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இலங்கை அணியில் காய்ச்சல் காரணமாக பிரதீப் பங்கேற்காததால் அவருக்கு பதிலாக லக்மல் அணியில் இடம்பெற்றார். தென்னாப்ரிக்க அணியில் மில்லர் மற்றும் நிகிடிக்கு பதிலாக பட்ரீடோரியஸ் மற்றும் டுமினியும் அணியில் இடம் பெற்றனர்.
இதன் படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக கருணரத்னே மற்றும் குசால் பெரேரா களமிறங்கினர். ரபாடா தென்னாப்ரிக்க அணிக்காக முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே கருணரத்னே ரபாடா பந்தில் போல்டு ஆனார். அதனைத் தொடர்ந்து அவிஷ்கா பெர்னால்டோ களமிறங்கினார். இவர் குசால் பெரேரா உடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இந்த ஜோடி ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 67 ஆக இருக்கும் போது அவிஷ்கா பெர்னால்டோ 30 ரன்னில் ப்ரீடோரியஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே குசால் பெரேராவும் 30 ரன்களில் ப்ரீடோரியஸ் பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
பின்னர் குசால் மென்டிஸ் மேத்யூஸ் உடன் இணைந்தார். ஆனால் இந்த ஜோடியும் நிலைக்கவில்லை மேத்யூஸ் 11 ரன்களில் மோரிஸ் பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவரில் 203 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்ரிக்க அணி சார்பில் மோரிஸ் மற்றும் ப்ரீட்டோரியஸ் தலா மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன் பின் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்ரிக்க அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் வழக்கம் போல ஆம்லா மற்றும் டீ காக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பத்தில் நல்ல துவக்கத்தையே தந்தது. டீ காக் ஓவர்கள் தோறும் பவுண்டரிகளாக விளாசியும் மறுபுறம் ஆம்லா நிதானமாக ஆடியும் ரன்களை குவித்து வந்தனர். ஆனால் டீ காக் 15 ரன்களில் இருந்த நிலையில் மலிங்கா பந்தில் போல்டு ஆனார். முதல் விக்கெட்டை விரைவில் இழந்து விட்டார்களே எனவே எளிதில் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் தென்னாப்ரிக்க அணி இழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு.
அடுத்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடிவந்தனர். ஆரம்பத்தில் நிதானமாகவே ஆடிவந்த இந்த ஜோடி கிடைக்கும் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றி ரன்களை குவித்து வந்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதங்கள் விளாசியும் அசத்தினர். இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணி தங்களிடம் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தி பார்த்தது. ஆனால் எதுவும் அந்த அணிக்கு பலனளிக்கவில்லை. இறுதியில் தென்னாப்ரிக்க அணி 37.2 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் இலக்கை எட்டியது. சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ் 96 ரன்களும், ஆம்லா 80 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய ப்ரீட்டோரியஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணியும் அரையிறுதி செல்லும் வாய்ப்பினை இழந்தது.