அதன் பின் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்ரிக்க அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் வழக்கம் போல ஆம்லா மற்றும் டீ காக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பத்தில் நல்ல துவக்கத்தையே தந்தது. டீ காக் ஓவர்கள் தோறும் பவுண்டரிகளாக விளாசியும் மறுபுறம் ஆம்லா நிதானமாக ஆடியும் ரன்களை குவித்து வந்தனர். ஆனால் டீ காக் 15 ரன்களில் இருந்த நிலையில் மலிங்கா பந்தில் போல்டு ஆனார். முதல் விக்கெட்டை விரைவில் இழந்து விட்டார்களே எனவே எளிதில் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் தென்னாப்ரிக்க அணி இழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு.
அடுத்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடிவந்தனர். ஆரம்பத்தில் நிதானமாகவே ஆடிவந்த இந்த ஜோடி கிடைக்கும் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றி ரன்களை குவித்து வந்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதங்கள் விளாசியும் அசத்தினர். இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணி தங்களிடம் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தி பார்த்தது. ஆனால் எதுவும் அந்த அணிக்கு பலனளிக்கவில்லை. இறுதியில் தென்னாப்ரிக்க அணி 37.2 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் இலக்கை எட்டியது. சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ் 96 ரன்களும், ஆம்லா 80 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய ப்ரீட்டோரியஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணியும் அரையிறுதி செல்லும் வாய்ப்பினை இழந்தது.