சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் மிக மோசமாக இலங்கை அணி இழந்தது. குறிப்பாக இரண்டு போட்டிகளிலுமே 200 ரன்களை கடப்பதற்கே இலங்கை அணி வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
‘தினேஷ் சண்டிமால்’ அதிரடி நீக்கம்.
இந்த மாதம் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான டெஸ்ட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இலங்கை அணி கேப்டன் ‘தினேஷ் சண்டிமால்’ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
சண்டிமால் சமீபகாலமாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸில் விளையாடி வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் அவரின் அதிகபட்ச ரன்கள் வெறும் 15 மட்டுமே. இதன் காரணமாகவே அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமல்லாது அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் சண்டிமாலை தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தி உள்ளது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தால் மட்டுமே இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் சண்டிமால் தற்போது உள்ளார்.
சன்டிமாலின் நீக்கம் காரணமாக இலங்கையின் டெஸ்ட் அணிக்கு பொறுப்பு கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் ‘டிமுத் கருணரத்னே’ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பேட்ஸ்மேனான ‘ஓஷாடோ பெர்னாண்டோ’, வேகப்பந்து வீச்சாளரான ‘மொஹமத் சிராத்’ மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ‘லசித் எம்புல்தேனியா‘ ஆகிய மூன்று வீரர்கள் இந்த அணியில் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். மேலும் ஆல்ரவுண்டரான ‘மிலிந்தா சிரிவர்தனே’ ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
குறிப்பாக சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் இரட்டை சதம் விளாசி அரிய சாதனை படைத்த ‘ஆஞ்சலோ பெரேரா’க்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி விபரம்.
டிமுத் கருணரத்னே (கேப்டன்), நிரோஷன் டிக்வெல்லா, லகிரு திரிமன்னே, குஷால் சில்வா, குஷால் மென்டிஸ், குஷால் பெரேரா,
மிலிந்தா சிரிவர்தனே, ஆஞ்சலோ பெரேரா, தனஞ்செயா டி சில்வா, சுரங்க லக்மால், கே ரஜிதா, லக்ஷன் சண்டக்கன், ஓஷாடோ பெர்னாண்டோ, மொஹமத் சிராத், லசித் எம்புல்தேனியா, விஷ்வ பெர்னாண்டோ, சி கருணரத்னே.
இலங்கை அணி கடைசியாக விளையாடியுள்ள 18 சர்வதேச போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானை பந்தாடி சூப்பர் பார்மில் இருக்கும் தென்னாப்பிரிக்காவின் சவாலை இலங்கை அணி சமாளிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வருவதால் அனைத்து வீரர்களும் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்த கடும் முயற்சி எடுப்பார்கள் என நம்பலாம். எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்லும் இந்த இளம் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 13-ம் தேதி டர்பன் நகரில் நடைபெற உள்ளது.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்.