உலககோப்பை நிறைவடைந்ததை தொடர்ந்து வங்கதேச அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் பங்கேற்ற வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹாசனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அணியின் கேப்டன் மொரட்டஷா காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்காததால் அணியின் மூத்த வீரரான தமீம் இக்பால் அணியை வழிநடத்தினார். இதில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று கொலும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்னே பேடாடிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி அவிஷ்கா பெர்னால்டோ மற்றும் கருணரத்னே துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் துவக்கத்திலேயே பெர்னால்டோ வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஷாய்புல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குசால் பேரேரா கருணரத்னே உடன் இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் கருணரத்னே 46 ரன்களுக்கும், குசால் பெரேரா 42 ரன்களுக்கும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் பின்னர் அந்த அணியின் மூத்த வீரரான மேத்யூஸ் குசால் மெண்டிஸ் உடன் இணைந்தார். இவர்கள் இருவரும் வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். கிடைக்கும் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த வங்கதேச அணி பல பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தது. ஆனால் எதுவும் அவர்களுக்கு அப்போது கை கொடுக்கவில்லை. 20 ஓவர்கள் வரை இந்த ஜோடி நிலைத்து ஆடியது. இவர்கள் இருவரும் இணைந்து நான்காம் விக்கெட்டுக்கு 101 ரன்கள் குவித்தனர். அப்போது அதிரடியாக ஆடி அரைசதத்தை கடந்த குசால் மெண்டிஸ் 54 ரன்களில் இருந்த போது சவுமியா சர்க்கார் வீசிய பந்தில் சபீர் ரகுமானிடன் கேட்ச் ஆனார்.
இதனைத் தொடர்ந்து ஷனகா களமிறங்கினார். இவர் களமிறங்கியது முதலே ருத்ரதாண்டவம் ஆடினார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த மேத்யூஸ் இந்த தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் வெளுத்து வாங்கிய ஷனகா 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி 30 ரன்கள் குவித்தார். இந்நிலையில் அவரும் ஷாய்புல் பந்தில் சபீரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஆட்டம் இறுதி ஓவர்களை நெருங்கியதால் அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆட முயற்சித்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மறுமுனையில் நிலைத்து ஆடிவந்த மேத்யூஸ் இறுதியில் 87 ரன்கள் எடுத்த நிலையில் சவுமியா சர்க்கார் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 294 ரன்கள் எடுத்து.8 விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சவுமியா சர்க்கார் மற்றும் ஷாய்புல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் தமீம் இக்பால் மற்றும் அனமுல் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டி துவங்கிய இரண்டாவது ஓவரிலேயே அந்த அணியின் கேப்டன் தமீம் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ராஜிதா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் சவுமியா சர்க்கார் களமிறங்கினார். பந்துவீச்சில் கலக்கியது போலவே பேட்டிங்கிலும் கலக்கினார் அவர். ஆனால் எந்தவொரு வீரரும் அவருக்கு துணையாக நிற்கவில்லை. மற்ற வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து நடையை கட்டினர். அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஹீம் மற்றும் முகமதுல்லா என அனைவரும் சொற்ப ரன்களுக்கே தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இருந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய சவுமியா சர்க்கார் தனது அரைசதத்தை கடந்தார்.
அவரும் இறுதியில் 69 ரன்களில் இருக்கும் போது தனஜெயாவின் பந்தில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். இறுதியில் இஸ்லாம் மட்டும் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார். ஆனால் மறுமுனையில் அனைவரும் ஆட்டமிழக்க வங்கதேச அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்த போட்டியை இலங்கை அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஷனகா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி தொடரையும் 3-0 என கைப்பற்றியது இலங்கை அணி. சிறப்பாக ஆடி 86 ரன்கள் குவித்த மேத்யூஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை பெற்றார்.