பின்னர் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் தமீம் இக்பால் மற்றும் அனமுல் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டி துவங்கிய இரண்டாவது ஓவரிலேயே அந்த அணியின் கேப்டன் தமீம் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ராஜிதா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் சவுமியா சர்க்கார் களமிறங்கினார். பந்துவீச்சில் கலக்கியது போலவே பேட்டிங்கிலும் கலக்கினார் அவர். ஆனால் எந்தவொரு வீரரும் அவருக்கு துணையாக நிற்கவில்லை. மற்ற வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து நடையை கட்டினர். அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஹீம் மற்றும் முகமதுல்லா என அனைவரும் சொற்ப ரன்களுக்கே தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இருந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய சவுமியா சர்க்கார் தனது அரைசதத்தை கடந்தார்.
அவரும் இறுதியில் 69 ரன்களில் இருக்கும் போது தனஜெயாவின் பந்தில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். இறுதியில் இஸ்லாம் மட்டும் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார். ஆனால் மறுமுனையில் அனைவரும் ஆட்டமிழக்க வங்கதேச அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்த போட்டியை இலங்கை அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஷனகா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி தொடரையும் 3-0 என கைப்பற்றியது இலங்கை அணி. சிறப்பாக ஆடி 86 ரன்கள் குவித்த மேத்யூஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை பெற்றார்.