கிரிக்கெட்டில் புதிய புரட்சி : சர்ச்சைக்குரிய தவறான தீர்ப்புகளுக்கு முடிவு கட்ட விரைவில் அறிமுகமாக உள்ளது 'ஸ்மார்ட் பந்து'.

Normal Cricket Ball to a Smart Cricket Ball.
Normal Cricket Ball to a Smart Cricket Ball.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரிலும் வீரர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது நடுவர்கள் வழங்கும் தவறான தீர்ப்புகள் தான். ஒரு தவறான தீர்ப்பின் மூலம் ஆட்டத்தின் முடிவே மாறி விடுகிற நிலையும் உருவாகிறது.

நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து முறையிடும் 'டீ.ஆர்.எஸ்' (DRS) தொழில் நுட்பத்தின் படி சில தவறான தீர்ப்புகள் மாற்றப்பட்டாலும் இந்த டி.ஆர்.எஸ் தொழில்நுட்பம் 100% துல்லியமாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற சர்ச்சையை தீர்ப்புகளுக்கு முடிவு கட்டும் வகையில் விரைவில் அறிமுகமாக உள்ளது 'ஸ்மார்ட் பந்து' (Smart Ball).

வழக்கமாக கிரிக்கெட்டில் பலவித புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் 'ஆஸ்திரேலியா' தான் இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்து உள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரபல பந்து தயாரிப்பு நிறுவனமான 'கூக்கபுரா' நிறுவனம் இந்த ஸ்மார்ட் பந்துகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

ஸ்மார்ட் பந்து (Smart Ball) என்பது என்ன?.

வழக்கமான கிரிக்கெட் பந்துகளில் அதிர்வுகளை தாங்கக்கூடிய, கீழே விழுந்து விடாத வகையில் மிகச் சிறிய 'சிப்பு'கள் (Chip) பொருத்தப்பட்டு வர இருப்பதே ஸ்மார்ட் பந்துகள் ஆகும். இந்த சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்தின் மூலம் பலவிதமான துல்லியமான தகவல்களை மற்றும் முடிவுகளை நாம் பெற முடியும்.

ஸ்மார்ட் பந்தின் பயன்பாடுகள்.

Smart Ball - Coming Soon.
Smart Ball - Coming Soon.
  • இந்த ஸ்மார்ட் பந்தின் மூலம் பந்துவீச்சாளர் பந்தை வீசும் போது உருவாகும் வேகம், பந்து தரையில் பட்டு பவுன்ஸ் ஆகும் போது வரும் வேகம் மேலும் பந்து பேட்ஸ்மனை நோக்கி செல்லும் பொழுது இருக்கும் வேகம் ஆகியவற்றை துல்லியமாக நாம் அறிய முடியும்.
  • சுழல் பந்துவீச்சாளர் வீசும்போது பந்தின் சுழற்சி எந்த திசையில் எப்படி இருக்கும் என்பதை பந்து காற்றில் இருக்கும்போதே நாம் அறிந்து கொள்ள முடியும்.
  • இந்த ஸ்மார்ட் பந்தின் மூலம் பந்து பேட்ஸ்மனின் பேட்டில் பட்டு சென்றதா அல்லது உடல் பகுதியில் உரசி சென்றதா என்பதை துல்லியமாக கண்டறியமுடியும். மேலும் பந்து பேட்மேனின் பேட்டில் பட்டு காலுறையில் (Pad) பட்டதா அல்லது காலுறையில் உரசிய பின் பேட்டில் பட்டதா என்பதை நாம் கண்டறிய முடியும். இதன்மூலம் 'கேட்ச்' மற்றும் 'எல்பிடபிள்யூ' ஆகியவற்றிற்கு மிகச் சரியான தீர்ப்பை வழங்க முடியும்.
  • மேலும் சர்ச்சைக்குரிய கேட்ச்களுக்கு இந்த பந்தின் மூலம் தீர்வு காணலாம். அதன்படி பந்து தரையில் பட்ட பிறகுதான் கேட்ச் பிடிக்கபட்டதா அல்லது அதற்கு முன்பாகவே சரியான முறையில் கேட்ச் பிடிக்கபட்டதா என்பதை இந்த பந்தின் மூலம் துல்லியமாக நாம் அறியலாம்.
  • தற்போது சோதனை முயற்சியில் உள்ள இந்த ஸ்மார்ட் பந்துகள் விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 'பிக் பாஷ்' T-20 தொடரில் அறிமுகம் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் இந்த பந்து சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் அறிமுகமாகும்.
  • சர்வதேச கிரிக்கெட்டில்இந்த ஸ்மார்ட் பந்து அறிமுகம் ஆனால் அது நிச்சயம் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் 'மைக்கேல் கேஸ்ப்ரோவிச்' தெரிவித்துள்ளார்.

நடுவர்களின் மோசமான தீர்ப்புகளுக்கு முடிவு கட்டும் இந்த 'ஸ்மார்ட் பந்து' விரைவில் அறிமுகம் ஆகட்டும்.