2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று(ஏப்ரல் 15) அறிவித்துள்ளது. தடையில் இருந்த ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ளனர்.
ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் கடந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் துனைக்கேப்டனாக இருந்தனர். மார்ச் 2018ல் நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பந்தை சேதப்படுத்திய வழக்கில் இருவரும் 1 வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் இந்த தடை முடிவடைந்த நிலையில் அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று கொண்டிருந்த பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் இவர்கள் இருவரின் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும் அடுத்தமாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் உலகக் கோப்பை அணியில் இவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது.
15பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் ஃபின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் பேட்ஸ்மேன் பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப், வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. அத்துடன் டார்ஸி ஷார்ட், கானே ரிச்சர்ட்சன், ஆஸ்டன் டர்னர், மேதிவ் வேட் ஆகியோரும் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
இவ்வருடத்தில் பீட்டர் ஹான்ட்ஸ்கோமின் பேட்டிங் சராசரி 43ஆக உள்ளது. அத்துடன் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஓடிஐ சதத்தை விளாசினார். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ள காரணத்தால் விக்டோரியாவைச் சேர்ந்த பீட்டர் ஹான்ட்ஸ்கோமிற்கு உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் கனவு கனவாகவே மாயமானது.
ஜனவரி மாதத்தில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தாலும் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று விடுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தார் ஜோஸ் ஹசில்வுட். ஆனால் பேட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜெ ரிச்சர்ட்சன், ஜேஸன் பெஹாரன்ஆஃப், நாதன் குல்டர் நில் ஆகியோரை மட்டுமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளர்களாக உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்துள்ளது.
ஜெ ரிச்சர்ட்சன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் 50ஓவர் கிரிக்கெட்டில் தங்களது ஃபிட்னஸை திறம்பட நிறுபித்துள்ளனர். ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ளனர். இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். தற்போது 2019 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர் டிரிவேர் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜெ ரிச்சர்ட்சன் ஆகியோருக்கு ஃபிட்னஸ் டெஸ்ட் நடத்தப்படும் என ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜீன் 1 அன்று ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் ஸ்டார்க் மற்றும் ரிச்சர்ட்சன் விளையாடுவதற்கு முன் ஃபிட்னஸ் டெஸ்ட் நடத்தப்பட்டு பின்னரே அணியில் சேர்க்கப்படுவர் எனவும் கூறப்பட்டு உள்ளது. மிகவும் சிறந்த 15 வீரர்களை இக்கட்டான சூழ்நிலையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப், ஆஸ்டன் டர்னர், கானே ரிச்சர்ட்சன் ஆகியோர் ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியில் இடம்பெறா விட்டாலும் ஆஸ்திரேலிய-ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய-ஏ அணி இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கிறது.
ஜோஸ் ஹசில்வுட்-ம் ஆஸ்திரேலிய-ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் அவர் காயம் காரணமாக கிரிக்கெட் ஏதும் விளையாடவில்லை. தற்போது ஆஸ்திரேலிய-ஏ அணியில் இவர் சேர்க்கப்பட்டுள்ளது அவரது ஆட்டத்திறனை வெளிக்கொணர உதவியாக இருக்கும். ஆஸஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு இவரது பங்களிப்பு மிகவும் தேவை.
ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணி: ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஜேஸன் பெஹாரன்ஆஃப், அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்), நாதன் குல்டர் நில், பேட் கமின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், ஜெ ரிச்சர்ட்சன், ஸ்டிவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.