பாக்ஸிங் டே டெஸ்ட் : பாகிஸ்தான் அணியை எளிதில் வென்றது தென் ஆப்ரிக்கா 

டேல் ஸ்டெயின்
டேல் ஸ்டெயின்

தென் ஆப்ரிக்கா நாட்டுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அந்நாட்டில் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையடவுள்ளது.

இதன் ஓரு பகுதியாக டெஸ்ட் போட்டி தொடர் பாக்ஸிங் டே நாளான டிசம்பர் 26 தேதி துவங்கியது. தென் ஆப்ரிக்கா நாட்டில் பொதுவாக டர்பன் நகரில் பாக்ஸிங் டே டெஸ்ட் ஆட்டம் நடைபெறும். இந்த வருடம் சென்டூரியன் நகரில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பாகிஸ்தான் அணி பேட் செய்தது. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சாளர்கள்கள் பாகிஸ்தான் அணியின் விக்கெட்களை சீரான இடைவெளிகளில் வீழ்த்தினர். அந்த அணியின் பாபர் ஆசாம் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பாபர் ஆசாம் 71 ரன்கள் குவித்தார். ஹசன் அலியுடன் சேர்ந்தது 9 விக்கெட்டுக்கு 67 ரன்கள் குவித்தார் பாபர் ஆசாம். அந்த அணி 47 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் டுவனே ஒலிவிர் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்கள் வீழ்த்தினார். டேல் ஸ்டெயின் பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை அடைந்தார்.

பாபர் ஆசாம்
பாபர் ஆசாம்

பின்னர் ஆடிய தென் ஆப்ரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியைபோலவே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. அந்த அணியின் வீரர்கள் சிறப்பாக இன்னிங்ஸை துவங்கிய போதும் தங்கள் விக்கெட்களை எளிதில் இழந்தனர். டெம்பா பவுமா அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக குயின்டன் டி காக் 45 ரன்கள் குவித்தார். தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் டக் அவுட் ஆனார். 223 ரன்களுக்கு தென் ஆப்ரிக்கா அணி அட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் இளம் வீரர் ஷஹீன் அப்ரிடி மற்றும் முகமது அமீர் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தினர். ஹசன் அலி எஞ்சிய 2 விக்கெட்களை சாய்த்தார்.

45 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது 2ஆவது இன்னிங்க்ஸை துவங்கியது. துவக்கம் முதலே அந்த அணி வீரர்கள் பொறுமையாக விளையாடினர். இமாம் உல் ஹக் மற்றும் ஷான் மசூத் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். பின்னர் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. அந்த அணியின் அசர் அலி, கேப்டன் சர்பாரஸ் அஹ்மது, யாஷிர் ஷா ஆகியோர் டக் அவுட் ஆகினர். கேப்டன் முதல் இன்னிங்சிலும் டக் அவுட் ஆனார். இதன் மூலம் இரு இன்னிங்சிலும் டக் அவுட் ஆன 4வது பாகிஸ்தான் கேப்டன் என்ற (சோ)சாதனைக்கு சொந்த காரர் ஆனார். பாகிஸ்தான் அணி 190 ரன்களுக்கு அட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க வீரர் டுவனே ஒலிவிர் இந்த இன்னிங்ஸிலும் 5 விக்கெட்கள் கைப்பற்றினார். இந்த போட்டியில் மொத்தம் அவர் 11 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ராபாடா 3 விக்கெட்களையும் ஸ்டெயின் 2 விக்கேட்களையும் கைப்பற்றினர்.

ஹாசிம் அம்லா
ஹாசிம் அம்லா

149 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியின் மாக்ரம் டக் அவுட் ஆனார். சமீப காலமாக நல்ல ஃபார்ம்இல் இல்லாத ஹாசிம் அம்லா நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் குவித்தார். டீன் எல்கர் சரியாக 50 எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பாரஸ் அஹ்மதுவை போலவே தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் பாப் டூ ப்லெஸிஸ் உம் இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனார். இதன் மூலம் ஒரு போட்டியின் இரு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனா இரு அணியிகளின் கேப்டன்கள் என்ற (சோ)சாதனையை இருவரும் படைத்தனர். தென் ஆப்ரிக்கா அணி 4 விக்கெட்கள் இழந்து இலக்கை அடைந்தது.

இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆன கேப்டன்கள் சர்பாரஸ் அஹ்மது மற்றும் டூ ப்லெஸிஸ்
இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆன கேப்டன்கள் சர்பாரஸ் அஹ்மது மற்றும் டூ ப்லெஸிஸ்

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்டதொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டநாயாகனாக இரு இன்னிங்சிலும் சேர்த்து 11 பாகிஸ்தான் விக்கெட்களை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா வீரர் டுவனே ஒலிவிர் தேர்வு செய்யப்பட்டார்.

டுவனே ஒலிவிர்
டுவனே ஒலிவிர்

தொடரின் இரண்டாம் போட்டி கேப் டவுன் நகரில் வரும் ஜனவரி மூன்றாம் தேதி துவங்கவுள்ளது.

Edited by Fambeat Tamil