முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!

VK
தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி
தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கிடையே டர்பன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் குசல் பெரீராவின் அற்புதமான ஆட்டத்தால் இலங்கை அணி, தென்னாப்பிரிக்கா அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சிறப்பு மிக்கதொரு வெற்றியை பெற்றது.

இதன்பின், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை 2 வது டெஸ்ட் போட்டி
தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை 2 வது டெஸ்ட் போட்டி

இதனிடையே, இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்றது. டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் தலைமையில் இந்த போட்டியில் களமிறங்கியது. அதேசமயம் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு இலங்கை அணி, வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தலைமையில் களமிறங்கியது. இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த போட்டி இன்று நடைபெற்றது.

இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் இலங்கை அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதனையடுத்து, டிக்வெல்லா மற்றும் தரங்கா இலங்கை சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் இங்கிடியின் பந்துவீச்சை சமாளிக்க திணறிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை முதல் ஒருநாள் போட்டி
தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை முதல் ஒருநாள் போட்டி

இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சீராக ரன்கள் குவிக்க துவங்கினர். இருப்பினும் பின்வரிசை வீரர்கள் சரியாக ஆடாததால், இலங்கை அணி 47 ஓவர்களில் 231 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 60 ரன்களும், ஒசாடா பெர்னாண்டோ 49 ரன்களும் குவித்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் இங்கிடி மற்றும் தாஹிர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுள் ஒருவரான ஹென்டிரிக்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் டி காக்கும் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ பிளஸ்ஸிசும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்த நிலையில் டி காக் 72 பந்துகளில் 81 ரன்கள் குவித்து தனஞ்செயாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, டூ பிளஸ்ஸிசுடன் வான்டர் டசன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் 104 பந்துகளில் சதமடித்தார்.

டூ பிளஸ்ஸிஸ்
டூ பிளஸ்ஸிஸ்

இதனால் தென்னாப்பிரிக்கா அணி 38. 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. டூ பிளஸ்ஸிஸ் 114 பந்துகளில் 112 ரன்களும், வான்டர் டசன் 43 பந்துகளில் 32 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் தனஞ்செயா மற்றும் விஸ்வா பெர்ணான்டோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சிறப்பாக விளையாடி சதமடித்த தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி சென்சூரியன் நகரில் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டி தென்னாப்பிரிக்கா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கவுள்ளது.