மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். இதுவரை உலகக் கோப்பையை கைப்பற்றாத தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்த வருட உலகக் கோப்பையில் கோப்பையை கைப்பற்ற பிரகாசமான வாய்ப்புள்ளது. சிறந்த அதிரடி தொடக்கத்துடன் தென்னாப்பிரிக்கா அணி உலகக் கோப்பை தொடரை ஆரமிக்க உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி கடைசியாக விளையாடிய பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
லின்டா ஜோன்டி தலைமையிலான தென்னாப்பிரிக்கா தேர்வுக்குழு அனுபவ வீரர் ஹாசிம் அம்லாவை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளது. அம்லாவின் இடத்திற்கு பல்வேறு வீரர்கள் போட்டி போட்டு கொண்டு இருந்தனர். அம்லாவுடன் ஏய்டன் மர்க்ரம் மற்றும் குவின்டன் டிகாக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவின்டன் டிகாக் இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா-வுடன் சேர்ந்து அதிரிடி பேட்டிங்கை ஐபிஎல் தொடரில் வெளிபடுத்தி வருகிறார்.
மிடில் ஆர்டரிலும் சிறப்பான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எய்டன் மக்ரம் தொடக்க வீரராக களமிறங்கினால், ஹாசிம் அம்லா, ஜே பி டுமினி, ஃபேப் டுயுபிளஸ்ஸி ஆகியோர் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு கடும் நெருக்கடியை அளிப்பார்கள். டேவிட் மில்லர் கடைநிலையில் சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் வெளிபடுத்தி வருகிறார். எனவே உலகக் கோப்பை தொடரிலும் இவரது அதிரடி தொடரும்.
40 வயதான இம்ரான் தாஹீர் சுழற்பந்து வீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் தம்ரைஜ் சம்ஸியை மாற்று சுழற்பந்து வீச்சாளராகவோ அல்லது இம்ரான் தாஹீருடனவோ பயன்படுத்த தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் ஜீன் பால் டுமினி உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணியில் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்த அதிரடி பந்துவீச்சின் மூலமே பல்வேறு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. தேர்வுக்குழு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான காகிஸோ ரபாடா, லுங்கி நிகிடி, அன்டில் பெலுக்வாயோ, டேல் ஸ்டெய்ன், அன்ரிச் ரோர்ட்ஜ், டுவைன் பிரிட்டோரிஸ் ஆகியோரை தேர்வு செய்துள்ளது.
ஃபேப் டுயுபிளஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 2019 உலகக் கோப்பை தொடரில் மே 30 அன்று ஓவலில் இங்கிலாந்து அணியை தனது முதல் போட்டியில் சந்திக்க உள்ளது. தற்போது அறிவித்துள்ள தென்னாப்பிரிக்க அணி முதன்மை அணி என்றும் அணியில் ஏதேனும் மாற்றம் இருந்தால் ஏப்ரல் 23ற்கு முன்பு தெரிவிக்கப்படும் எனவும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
முழு அணி விவரம்:
ஃபேப் டுயுபிளஸ்ஸி (கேப்டன்), குவின்டன் டிகாக், ஜேபி டுமினி, ஹாசிம் அம்லா, எய்டன் மக்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரீஜ் நோர்டிச், ஆன்டில் பெலுக்வாயோ, டுவைன் பிரிட்டோரிஸ், காகிஸோ ரபாடா, தம்ரைஜ் சம்ஸி, டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹீர், ராசி வென் டேர் துஸன்..