தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 177 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சர்ப்ராஸ் அகமது 56 ரன்கள் எடுத்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் இன் அபார சதத்தால் வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் சேர்த்தது. டீ காக் 55 ரன்களுடனும், பிலாந்தர் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்றது. முகமது அமீரின் அபார பந்துவீச்சில் எஞ்சிய விக்கெட்டுகள் விரைவாக விழுந்தன. டீ காக் 59 ரன்களிலும், பிலாந்தர் 16 ரன்களிலும், ரபாடா 11 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 254 ரன்கள் அதிகமாகும். பாகிஸ்தான் அணி தரப்பில் ஆமீர் 4 விக்கெட்டுகளும், சாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் வீழ்தினர்.
பின்னர் 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ‘இமாம் உல் ஹக்’, அசார் அலி தலா 6 ரன்களுடன் நடையை கட்டினர். பின்னர் ஷான் மசூதுடன் ஆசாத் ஷாபிக் இணைந்தார். இந்த இணை தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை சமாளித்து ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரை சதங்களை கடந்தார். ஸ்கோர் 159 ரன்களாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. 61 ரன்கள் எடுத்த மசூத், ஸ்டெய்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ‘பாபர் ஆசமும்’ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் சதத்தை நெருங்கிய ஆசாத் ஷாபீக் 88 ரன்களில் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டது.
ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் பாபர் ஆசம் மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் ஆட்டம் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்து முன்னிலை பெற உதவியது.
சிறப்பாக விளையாடி அரை சதத்தை கடந்த பாபர் ஆசம் 72 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழக்க சற்று நேரத்தில் பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
முடிவில் பாகிஸ்தான் அணி 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 40 ரன்கள் முன்னிலை பெற்றது. தென்னாபிரிக்க அணி தரப்பில் ரபாடா மற்றும் ஸ்டெய்ன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இத்துடன் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு 41 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நாளை தென்னாபிரிக்க அணி விரைவில் எட்டி விடும் என நம்பலாம்.
.