மே மாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் 2019 உலகக் கோப்பையை எதிர்கொள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய சர்வதேச தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் அவர்களது இந்த சிறப்பான ஆட்டத்திறன் சரியான நேரத்தில் வெளிப்பட்டுள்ளது.
2019 ஐபிஎல் தொடரில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சிறந்த ஆட்டத்திறனுடன் ஜொலிக்கின்றனர். காகிஸோ ரபாடா 7.83 எகானமி ரேட்டுடன் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இவ்வருட ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இம்ரான் தாஹீர் 5.89 என்ற சிறப்பான எகானமி ரேட்-டுடன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். குவின்டன் டிகாக் 137.45 சராசரியுடன் 378 ரன்களை விளாசி அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் டாப் 10ல் உள்ளார்.
தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸி பேட்டிங் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் அசத்துகிறார். பேட்டிங்கில் இவரது சராசரி 35.60 ஆகும். இவரைப் போலவே கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் டேவிட் மில்லரும் அற்புதமான கேட்சுகளை பிடித்து ஃபீல்டிங்கில் ஆட்டத்தை மாற்றும் திறமையை கொண்டு திகழ்கிறார். இவர் பேட்டிங்கில் தடுமாறி வந்தாலும் தற்போது வரை அவரது சராசரி 29.66ஆக உள்ளது.
சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நாதன் குல்டர் நில்-ற்கு மாற்று வீரராக களமிறங்கியுள்ள அனுபவ வீரர் டேல் ஸ்டெய்ன் பவர் பிளே மற்றும் டெத் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தி பௌலிங்கில் சொதப்பி வந்த அந்த அணியை மீட்டுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் அவர் களமிறங்கிய 2 போட்டிகளிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரிலும் வீரர்களது ஆட்டத்திறனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கவனித்து வருகிறது. ராசி வென் டேர் துஸன் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார். கடந்த வாரத்தில் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். இவர் சர்வதேச போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 8 இன்னிங்ஸில் 88.25 சராசரியுடன் 353 ரன்களை விளாசியுள்ளார். 2019 வருடத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு தனது பேட்டிங் மூலம் கடும் நெருக்கடியை அளித்தார். இந்த தொடர்களில் சில போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இவர் இருந்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் கலந்த அணியாக உள்ளது. அத்துடன் உலகக் கோப்பையை கைப்பற்ற முழு நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்வது தென்னாப்பிரிக்காவிற்கு கூடுதல் பலமாகும்.
தென்னாப்பிரிக்க உத்தேச XI vs இங்கிலாந்து (உலகக் கோப்பையில் முதல் லீக் போட்டி):
குவின்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்), ஃபேப் டுயுபிளஸ்ஸி (கேப்டன்), ஹாசிம் அம்லா, ராசி வென் டேர் துஸன், டேவிட் மில்லர், ஜே பி டுமினி, ஆன்டில் பெஹில்க்வாயோ, காகிஸோ ரபாடா, டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹீர், லுங்கி நிகிடி.