கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மனிதர் தனி ஒருவராக நின்று தனது அணியை வெற்றி கொள்ள செய்த மேட்சுகள் ஏராளம் பார்த்திருப்போம். பெரும்பாலும் அணிகளின் தொடக்க வீரர்களும் நட்சத்திர ஆட்டக்காரர்களும் மட்டுமே இப்படி தனி மனித வேட்டைகளை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்களாக இருப்பர். டெயில் எண்டராக களம் இறங்கி டெயில் எண்டர்களுடனே சேர்ந்து விளையாடி அதிக மேட்சுகளை தனது அணிக்காக வென்றெடுத்தவரை பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா... அப்படி ஒருவரை பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
தென்ஆப்ரிக்காவின் லான்ஸ் க்ளூஸ்னர். மிகத் தெளிவான ஒரு அதிரடி ஆல்ரவுண்டர். இந்தியாவிற்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பவுலிங்கின்போது அசாருதினால் ஒரே ஓவரில் நான்கு தொடர் பவுண்டரிகள் அடிக்கப் பட்டு வரவேற்க பட்டவர். அடுத்த இன்னிங்க்சிலேயே வெறும் 64 ரன்களை விட்டுக் கொடுத்து 8 விக்கெட்களை கைப்பற்றி தனது போராட்ட குணத்தை கிரிக்கெட் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரை க்ளூஸ்னர் ஒரு உபயோகமான பவுலிங் ஆல்ரவுண்டர் என்ற கணக்கில் ஏற்று கொள்ளப்பட்டவர்.
ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் தனது மட்டை வீச்சால் க்ளூஸ்னர் தொட்ட உயரங்கள் மிக அதிகம். ஹன்சி க்ரோனியே தலைமையில் உலகக்கோப்பை மட்டுமே வெல்ல முடியாத தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி.. மொத்த கிரிக்கெட் உலகையும் தனக்கு கீழே தானென வைத்திருந்த காலம் அது. பவுலிங்கை எடுத்துக் கொண்டால் ஆலன் டொனால்டும் ஷான் போலாக்கும் கூர் தீட்டிய ஈட்டிகளாக இரு பக்க பவுலிங் முனையை ஆக்ரமித்து விக்கெட்டுகளை வேட்டையாடினார்கள். முதல் ஸ்பெல் (Spell) மாற்றாக க்ளுஸ்னர் உள்ளே வரும்போது இரண்டு மூன்று விக்கெட்டுகள் விழுந்து எதிரணியின் மிடில்ஆர்டரை சிதைக்கும் வேலையில் இறங்கி கொண்டிருக்கும் . தன்னுடைய திறமையான வீச்சால் டொனால்ட் மற்றும் போலாக் தொடங்கி வைத்ததை வெற்றிகரமாக முடித்து வைப்பவராகவே விளங்கினார் க்ளூஸ்னர். அதீத சிக்கனமும் துல்லியமும் க்ளுஸ்னரின் பவுலிங்கில் தெறிக்கும். விக்கெட் டூ விக்கெட் மற்றும் யார்க்கர்கள் வீசுவதில் வல்லவர்.
பேட்டிங்கை எடுத்துக் கொண்டாலும் க்ளூஸ்னரின் அதிரடியை காண கண்கோடி வேண்டும். கேரி கிர்ஸ்டன், கிப்ஸ், கல்லினன், குரோனியே, காலிஸ், மெக்மிலன், என பெத்த கைகள் ஓய்ந்து போகும் வேளைகளில் மட்டுமே க்ளுஸ்னருக்கு தனது திறமையைக் காட்டிடும் வாய்ப்பு கிட்டும். அதுவும் சமயங்களில் கடைசி நான்கு ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருக்க வெற்றிக்கு 50 ரன்களை அடிக்க வேண்டிய தேவை எனும் நிலையில் எல்லாவற்றையும் க்ளுஸ்னர் பார்த்துக் கொள்வார் என முற்றாக ஒய்வெடுத்து கொள்ளும்-கள் இந்த பெத்த கைகள். ரணகளமாக ஆடி எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து தன் மீதான நம்பிக்கைகளைத் தக்க வைத்துக் கொள்வார் க்ளூஸ்னர். லான்ஸ் க்ளூஸ்னர் மொத்தம் ஆடிய 171 ஒரு நாள் போட்டிகளில் அவர் களமிறங்கியது வெறும் 137 இன்னிங்சுகள் மட்டுமே.. அவற்றில் 2 சதங்களையும் 19 அரைச்சதங்களையும் விளாசி 41.1 சராசரி வைத்திருந்தார் எனில் அவரது திறமையைக் கணித்து கொள்ளுங்கள்.
க்ளூஸ்னரின் கேரியர் மகுடத்தின் வைரக்கல் என்றால் அது 1999 உலகக்கோப்பை தான். இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த 99 உலகக்கோப்பையில் சொல்லிச் சொல்லி அடித்தார் என்றால் சற்றும் மிகையில்லாத வாக்கியம் அது. மொத்தமாக தெ.ஆ மொத்தமாக ஆடிய 9 போட்டிகளில் நான்கில் மேன் ஆப் த மேட்ச் க்ளூஸ்னர் தான். க்ளுஸ்னர் மேன் ஆப் த மேட்சாகத் தேர்ந்தெடுக்க பட்ட நான்கு போட்டிகளிலும் தெஆ வெற்றி வாகை சூடியிருந்தது. தான் களமிறங்கிய 8 போட்டிகளில் மொத்தமாக இரண்டு அரைசச்சதங்களுடன் 250 ரன்களை பெற்று 17 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார் க்ளுஸ்னர். அபாரமான சாதனை இது. ஆஸ்திரேலியாவுடனான அரைஇறுதி போட்டியில் கிட்டதட்ட தனது அணியை இறுதிக்கே எடுத்தும் சென்று தென்ஆப்ரிக்காவை துரத்திய உலகக்கோப்பை தூரதிற்ஷடத்தினால் வாய்ப்பை நழுவ விட்டார்.
சுவாரசியமான போட்டி அது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 213 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி தென்ஆப்ரிக்காவிற்கு வெற்றி இலக்காக 214 ரன்களை வைத்தது. எளிதான இலக்கைத் துரத்திய தெஆவிற்கு துவக்கம் அருமையாக அமைய நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மளமளவென்று ஆஸீயின் மெக்ராத் கில்லஸ்பி மற்றும் சைமன்ட்சின் வேகங்களில் விக்கெட்டுகள் விழத் துவங்க.. 45 ஓவர் முடிவில் 175/6 என்னும் ஸ்கோரில் நிலைபெற்று தவித்தது தெ.ஆ. வெற்றிக்கு ஐந்து ஓவரில் 39 ரன்கள் தேவை என்னும் நிலையிலும் க்ளூஸ்னர் தனது அதிரடியை நிறுத்தாமல் தொடர மறுபக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. 49 ஓவரின் முடிவில் 205 என்னும் ஸ்கோரில் தென்ஆப்ரிக்காவின் 9 விக்கெட்கள் பறி போயிருந்தன.
க்ளுஸ்னர் சற்றும் கலங்கியதாகத் தெரியவில்லை. கடைசி ஓவரை வீச வந்தார் டாமியன் ஃபிளமிங். அன்றைய ஆஸீ அணியில் மெக்ராத்திற்கு அடுத்த படியான முக்கிய ஸ்ட்ரைக் பவுலர். முதல் பந்தை எதிர்கொண்ட க்ளுஸ்னர் எக்ஸ்ட்ரா கவர் திசையில் "அறைந்த" அந்தப் பந்து ராக்கெட் வேகத்தில் பவுண்டரியை கடந்தது. ஸ்கோர் 209/9 என்றாக ஃபிளமிங் முகத்தில் ஈயாடவில்லை. அடுத்த பந்தை அரௌன்ட் த விக்கெட் ஓடி வந்து இன்ஸ்விங் யார்க்கராகப் போட முயல... ரிசல்ட் என்னவோ ஒன்றே தான் என்றாகி போனது. அதே எக்ஸ்ட்ரா கவரில் அதே போன்றதொரு ராக்கெட் வேக பவுண்டரியை அனுப்பியிருந்தார் க்ளூஸ்னர். ஃபிளமிங் கண்களில் நீரே தளும்பி விட்டது.ஸ்கோர் 213/9 என்கிற சமநிலையை எட்டியது.எஞ்சிய நான்கு பந்துகளில் வெற்றிக்குத் தேவை ஒரே ரன் என்கிற நிலையில் அடுத்த பந்தில் க்ளுஸ்னர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு தடுப்பாட்டமாகக் கட்டை வைக்க ரன்னர் முனையில் நின்றிருந்த டொனால்ட் தேவையே இல்லாமல் ஓடி வந்து ரன்அவுட்டாகப் பார்த்து படாதபாடு பட்டுத் திரும்பி க்ரீசை அடைந்தார்.
ஸ்கோர் 49.3 ஓவரில் 213/9 என்றாகி போனது. அடுத்த மூன்று பந்துகளில் எளிதாக ஒரு ரன்னை எடுத்து வென்று விடும் தெ.ஆ என ஆஸ்திரேலிய அணியினரே நம்ப துவங்கியிருந்த வேளையில் தான் தெ.ஆ அணியின் உலகக்கோப்பை தொடர் தூரதிர்ஷடம் தனது வேலையைக் காட்டியது. ஆம். இம்முறை க்ளுஸ்னர் ஒரு ரன்னுக்கு தட்டி விட்டு ஓடி வர எதிர்முனை டொனால்ட் க்ளுஸ்னர் ஓடி வருவதை கவனிக்காது பந்தையே பார்த்துக் கொண்டு நின்று விட்டார். க்ளுஸ்னர் ரன்னர் முனையையே தொட்டு விட்டபின்னர் சுதாரித்து டொனால்ட் மறுமுனையை ஓடிச் சேர்வதற்குள் பந்தைச் சேகரித்திருந்த மார்க் வாக் கில்கிறிஸ்டிடம் வீச அவர் ஸ்டம்ப்பை பெயர்த்து டொனால்டை ரன் அவுட்டாக்கியிருந்தார். ஸ்கோர் சமன் என்றான நிலையில் முன்பு லீக் போட்டிகளில் தென்ஆப்ரிக்காவை வென்றிருந்த அடிப்படையில் ஆஸி பைனலுக்குள் நுழைந்தது.
இந்தத் தொடரில் தென்ஆப்ரிக்கா செமிபைனலுடன் வெளியேற நேர்ந்திருந்தாலும் தொடர் நாயகன் விருது லான்ஸ் க்ளூஸ்னருக்கே அவரது மிகச் சிறப்பான ஆட்டத்திற்காக வழங்கப்பட்டது. அதே ஆண்டில் கிரிக்கெட் உலகின் பெருமை மிகு விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் விஸ்டன் "ப்ளேயர் ஆப் த இயர் " விருதுக்கும் க்ளூஸ்னரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு அந்த விருதினையும் வென்றெடுத்திருந்தார். லான்ஸ் க்ளுஸ்னர் தென்ஆப்ரிக்கா வீரராக இருந்தாலும் 90 களின் இறுதியில் கிரிக்கெட்டினை சுவாசித்த அகில உலக ரசிகர்கள் நெஞ்சங்களிலும் இன்றைக்குக்கும் வீற்றிருப்பவர்களில் குறிப்பிட தகுந்த வீரர்