தென்னாப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை தென்னாப்ரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. பின்னர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான அணியும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சப்ராஸ் அகமது தென்னாப்ரிக்கா ஆல்ரவுண்டரான பிலக்வாயோ-வை நிறத்தை வைத்து வசைபாடியதால் பிசிசிஐ அவரை கடைசி இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளிலில் விளையாட தடை விதித்தது.
இதன்மூலம் இன்றைய போட்டியில் சப்ராஸ் அகமது-க்கு பதிலாக ரிஸ்வான் அணியில் சேர்க்கப்பட்டார். சோயிப் மாலிக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் தென்னாப்ரிக்கா அணி கேன்சர் நோய்க்கு விளிப்புணர்வு அளிக்கும் விதமான பிங்க் நிற ஜெர்சி அணிந்து களமிறங்கினர். டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி வீரர்களுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டி காக் ரன் எதுவும் எடுக்காமல் சாகின் அப்ரிடி வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹென்ரிக்ஸ்-ம் சாகின் அப்ரிடி பந்து வீச்சில் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் அந்த அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
சரிவில் இருந்து மீட்ட அம்லா – டூ பிளசிஸ் ஜோடி
பின்னர் ஜோடி சேர்ந்த துவக்க ஆட்டக்காரரான அம்லா மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் அணியை சரிவிலிருந்து மீட்டனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். டூ பிளசிஸ் 57 ரன்களில் சதப்கான் பந்து வீச்சிலும், அம்லா 59 ரன்கள் எடுத்த நிலையில் இமாட் வாசிம் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனனர்.
உஸ்மான் கான் அபாரம்
பின் களமிறங்கிய துஸ்ஸுன் 18 ரன்களில் உஸ்மான் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கடைசியில் தென்னாப்ரிக்கா 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக உஸ்மான் கான் 4 விக்கெட்டுகளும், சாகின் அப்ரிடி மற்றும் சதப் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கினர் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான பஃகர் ஜமான் மற்றும் இமாம்-உல்-அக். இவர்கள் இருவரும் தென்னாப்ரிக்க அணியின் பந்து வீச்சினை நாலாபுறமும் சிதறடித்தனர். பஃகர் ஜமான் 44 ரன்களில் தாகிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பாபர் அஸாம் அதிரடியாக விளையாட மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இமாம்-உல்-அக் அரைசதம் கடந்தார். பின்னர் அவர் 71 ரன்கள் எடுத்த நிலையில் பிலக்வாயோ பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 31.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பாபர் அஸாம் 41 ரன்களுடனும், ரிஸ்வான் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய உஸ்மான் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியை பாகிஸ்தான் அணி வென்றதின் மூலம் தொடரை 2-2 என சமன் செய்துள்ளது. எனவே அடுத்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணியே தொடரைக் கைப்பற்றும்.
தென்னாப்ரிக்க அணி பிங்க் ஜெர்ஸியில் விளையாடிய ஒருநாள் போட்டி தோல்வியடைவது இதுவே முதல்முறை.