நடந்தது என்ன?
உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை தொடர் தொடங்க சில வாரங்களே உள்ளது. இந்த கிரிக்கெட் திருவிழாவிற்கு முன் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு சிறப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. ஐசிசி 2019 உலகக் கோப்பையில் இலங்கை கிரிக்கெட் அணி கடலுக்கடியில் கிடக்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு அதன் மூலம் செய்யப்படும் ஜெர்ஸியை அணிந்து விளையாடும் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
பிண்ணனி
உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி ஏப்ரல் 17, 2019 அன்று வெளியிடப்பட்டது. அந்த அணியை கண்டு உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இலங்கை அணியின் கேப்டன்களாக இருந்த தினேஷ் சன்டிமால் மற்றும் லாசித் மலிங்கா ஆகியோரை நீக்கி விட்டு திமுத் கருணாரத்னே-வை உலகக் கோப்பை இலங்கை அணிக்கு கேப்டனாக நியமித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள திமுத் கருணாரத்னே கடைசியாக 2015 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன்பின் அவர் எந்த ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இவ்வருடத்தின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இலங்கை அணி திமுத் கருணாரத்னே தலைமையில் வென்றுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்திருக்கும் என தெரிகிறது.
கதைக்கரு
உலகக் கோப்பையில் இலங்கை அணி அணியவிருக்கும் ஜெர்ஸி சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. எனவே மே 30 அன்று கோலகலமாக இங்கிலாந்தில் தொடங்கவுள்ள 2019 உலகக் கோப்பையில் இலங்கை அணி பெருங்கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவை மறுசுழற்சி செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடும் என தெரிவித்தது.
உலகம் வெப்பமயமாதலால் மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த விழிப்புணர்வு உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. நாம் உபயோகித்த பழைய பொருட்களை மீண்டும் மறுசுழற்சி மூலம் உபயோகப்படுத்துவதன் மூலம் பூமி வெப்பமயமாதலை கட்டுபடுத்த வாய்ப்புள்ளது. பெருங்கடல் பிளாஸ்டிக் கழிவின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை ஜெர்ஸி இலங்கை வண்ணத்தில் மிகவும் அருமையாக உள்ளது.
அடுத்தது என்ன?
2019 உலகக் தொடர் தொடங்க சில வாரங்களே உள்ளது. இலங்கை அணி தனது கடந்த இரு ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தை சர்வதேச போட்டிகளில் வெளிபடுத்தி வந்துள்ளது. தற்போது அணியில் பல மாற்றங்களை செய்து புது பொலிவுடன் உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது. அத்துடன் தனது ஜெர்ஸியையும் சிறப்பாக மாற்றியமைத்து உள்ளது. மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை இலங்கை கிரிக்கெட் அணி தன்வசம் கொண்டு வரும் என இலங்கை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.