நம் தமிழ் நாட்டிலிருந்து இந்திய அணிக்கு தேர்வாகி விளையாடும் வீரர்கள் மிகவும் குறைவு. அதிலும் ஒருசிலர் சரியான இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர். தற்போது இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், அஷ்வின், முரளி விஜய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் விளையாடியுள்ளனர். இதில் அஷ்வினைத் தவிர மற்ற வீரர்களுக்கு இடம் நிரந்தரமில்லாதது தான். ஆனால் 1980 மற்றும் 90களில் தமிழ்நாட்டிவிருந்து தேர்வாகி இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைத்த வீரர் ஶ்ரீகாந்த். அவர் படைத்துள்ள சிறந்த சாதனைகளை இந்த தொகுப்பில் காணலாம்.
#3) 1983 உலககோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன் அடித்த வீரர்
1983 உலககோப்பை போட்டி இந்திய அணியால் இன்றளவும் மறக்க முடியாத போட்டியாகவே விளங்குகிறது. ஏனென்றால் இந்திய அணி முதல் முறையாக உலககோப்பையை வென்றது அந்த தொடரில் தான். இதில் இறுதிப்போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. (அப்போதைய ஒருநாள் போட்டி 60 ஓவர்களை கொண்டதாகும்). இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்த இந்திய அணி 54.4 ஓவர்களுக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக ஶ்ரீகாந்த் 38 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா 140 ரன்களுக்கு சுருட்டி தனது முதல் உலககோப்பையை பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரராகளான கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் நேர்த்தியாக விளையாடி 38 ரன்கள் குவித்த ஶ்ரீகாந்த் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.
#2) ஒருநாள் தொடரில் இருமுறை 5விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்
ஶ்ரீகாந்த் அப்போதைய காலகட்டத்தில் இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக திகழ்ந்தார். அவர் தனது பேட்டிங்-ல் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது பந்து வீச்சு சாதனையைப் பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிதவேக பந்து வீச்சாளராக திகழ்ந்துள்ளார் இவர். இவரை பகுதிநேர பந்துவீச்சாளராகவே இந்திய அணி பயன்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் 5 விக்கெட்டுகளை இருமுறை எடுத்து அசத்தியுள்ளார் இவர். 1988 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அதில் முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார் இவர். ஒருநாள் தொடரில் இருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வீரர் இவர் தான். இவரின் இந்த சாதனை இன்றளவும் முறியடிக்க முடியாததாகவே உள்ளது.
#1) ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் இந்தியர்
டெஸ்ட் போட்டிகளைக் காட்டிலும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக ஶ்ரீகாந்த் திகழ்ந்துள்ளார். இவரின் வருகைக்கு பின்னரே சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்திய அணிக்கு துவக்க வீரராக விளையாடியுள்ள இவர் 144-வது இன்னிங்ஸ்ல் ஒருநாள் போட்டியில் 4000 ரன்களை கடந்நார். இதன் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகினார் ஶ்ரீகாந்த். தனது ஒருநாள் கேரியரில் மொத்தம் 4 சதங்கள் விளாசியுள்ளார். இவரது சராசரி 28.61 மற்றும் ஸ்டரைக்ரேட் 71.75 ஆகும்.