தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 0-2 என பின்தங்கி உள்ளது. இந்த போட்டிக்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை அணி கேப்டன் ‘லசித் மலிங்கா’ வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதன் மதிப்பை உணர்வது போல தெரியவில்லை என சற்று ஆவேசமாகவே கூறியுள்ளார்.
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி ‘செஞ்சுரியன்’ மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ‘டீ காக்’ மற்றும் கேப்டன் ‘ஃபாப் டுப்ளசிஸ்’ கணிசமான பங்களிப்பை தர மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். டீ காக் 94 ரன்களும், டுப்ளசிஸ் 57 ரன்களும் விளாச தென்னாபிரிக்க அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சில் 138 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ‘ஓசாதோ பெர்னாண்டோ’ 31 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ‘ரபடா’ 3 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 46 ரன்களுக்கு இழந்து மொத்தம் 32.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்குப் பிறகு இலங்கை அணி கேப்டன் லசித் மலிங்கா அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் முதல் 10-15 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசவில்லை. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் அவர்களின் தவறுகளை திருத்திக் கொண்டு தென்னாப்பிரிக்க அணியை 251 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். இது உண்மையிலேயே மிகச் சிறப்பான ஒரு விஷயம்”.
மேலும் மலிங்கா கூறுகையில், “ஆனால் எங்களது வீரர்களுக்கு ஒரு விஷயம் இன்னும் சரியாக புரியவில்லை. அவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு ஏதோ அதிர்ஷ்டத்தால் கிடைத்ததல்ல அவர்களுக்கு மிகச் சிறப்பான திறமை இருக்கிறது. அதனால் தான் அவர்கள் இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெற்று இருக்கிறார்கள். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதன் மதிப்பை வீரர்கள் அனைவரும் உணர வேண்டும்”.
“அவர்கள் தான் கிடைக்கின்ற வாய்ப்பினை கெட்டியாக பிடித்து சிறப்பான ஆட்டத்தை வழங்க முயற்சி செய்ய வேண்டும்”. இவ்வாறு மலிங்கா கூறினார்.
தொடரில் 0-2 என பின்தங்கியுள்ள இலங்கை அணி தனது அடுத்த ஆட்டத்திலும் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும். ‘மலிங்கா’வின் இந்த ஆவேச பேச்சு இலங்கை வீரர்களிடையே மாற்றத்தை உண்டாகுமா என்பதை அடுத்த போட்டியில் காணலாம். 3-வது ஒரு நாள் போட்டி ‘டர்பன்’ நகரில் வருகிற 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.