இலங்கை அணி எதிர்வரும் உலகக்கோப்பை போட்டியில் படுதோல்வி அடையும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் 1996 உலகக்கோப்பை சாம்பியனான இலங்கை அணியின் தலைவரும் ஆன அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கை அணியினரிடையே ஒற்றுமை இல்லாத நிலைமை ஒன்று காணப்படுகிறதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி ஒருபோதும் இல்லாதவாறு மிகவும் கீழ்மட்ட செயல்திறனை ஐ காட்டி வருகிறது.அவர்களால் கௌரவமான வெற்றிகளை பெறமுடியமால் சிதைந்து கிடக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினர் தமது முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்களால் படுதோல்வி அடைந்திருந்தார்கள். இன்று ஆரம்பமான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 384 ரன்களுக்கு வெறும் 4 விக்கெட்டுக்களை இழந்து தனது முதல் நாளை நிறைவு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இத்தொடரில் இலங்கை டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று தொடர்களையும் இழந்து சொதப்பியிருந்ததது. இத்தொடரில் அஞ்சலோ மேதீவ்ஸ் சிறப்பாக செயற்பட்டிருந்தாலும் இவர் வழக்கம் போல் தொடரின் இடையில் காயத்துக்கு உள்ளாகி தொடரில் இருந்து விலகியிருந்தார்.
என்ன நடக்கிறது?
இலங்கை கிரிக்கெட்டின் மேல்மட்டத்தில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் இலங்கை அணியினர் இடையே முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டிருப்பதும் அவர்கள் போட்டி தொடர் முடிவுகளில் இருந்து தெளிவாக தெரிகிறது.
மேல் கூறப்பட்டவைகளையே தெரிவிக்கும் 1996 உலகக்கோப்பை சாம்பியன் இலங்கை அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க இலங்கை அணி இம்முறை உலகக்கோப்பை போட்டிகளில் முதல் சுற்றிலே வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில்
“இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் நடைபெறுகிறது . வீரர்கள் சோர்வுற்றிருக்கிரார்கள்.வீரர்கள் தமக்கிடையே சண்டையிட்டுக்கொள்கிறார்கள்.”
மேலும் தெரிவிக்கையில்
“அணியில் சில வீரர்கள் நாட்டுக்காக விளையாடாமல் தமக்காக சுயநலமாக விளையாடுகிறார்கள்".
இலங்கையின் போக்குவரத்து துறை அமைச்சரான அர்ஜுன ரணதுங்க இம்முறை கிரிக்கெட் சபை தேர்வில் கலந்து கொண்டு தேசிய அணியில் பல திருப்பங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை தேர்வு இம்மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல கலந்துரையாடல்களை நடத்திவரும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அஞ்சலோ மேதீவ்ஸ் மற்றும் லசித் மாலிங்கவை சந்தித்து மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார் . மோதல்கள் தீவிரம் அடைந்திருப்பதை அறிந்து அமைச்சர் இலங்கை அணியினரை சந்திக்க இன்று ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
அடுத்தது என்ன?
ஆஸ்திரேலியாவுடன் தற்போது நடைபெற்றுவரும் போட்டியில் பெரிதாக சாதிப்பது என்பது இலங்கைக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும் . ஆஸ்திரேலியா தனது முதல் நாளிலே 384 ஓட்டங்களை குவித்துள்ளது வெறும் 4 விக்கெட்டுகளை இழந்து. போட்டி எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . எனினும் இதன் பின் இலங்கை தென்னாப்பிரிக்காவை 2 டெஸ்ட்கள் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் எதிர்கொள்ளவுள்ளது.
தொடர்ச்சியாக உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இலங்கைக்கு இம்முறை பெரியதோர் சவால் காத்திருக்கிறது.