உலக கோப்பைக்கு முன் நடக்கும் ஐபிஎல் தொடரின் மூலம் உலக கிரிக்கெட்டில் விட்ட இடத்தை பிடிக்க நினைக்கும் ஸ்டீவ் ஸ்மித்

Steve Smith Press Conference
Steve Smith Press Conference

பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக தடையிலுள்ள ஸ்டீவ் ஸ்மித் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். தென்னாப்பிரிக்காவில் நடந்த அந்த நிகழ்வுக்கு பிறகு முதன்முதலாக ஸ்டீவ் ஸ்மித் மனம் திறந்துள்ளார். அடுத்த ஆண்டு உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, அதற்கு முன்பு நடக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி பிரதான உலக கோப்பை தொடருக்கு தயாராக ஸ்டீவ் ஸ்மித் திட்டமிட்டுள்ளார்.

ஸ்மித் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக , சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட ஒரு வருடம் தடைவிதித்திருந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அதன் காரணமாகவே ஆஸ்திரேலியா கிரிக்கெட்டானது தவிர்க்க முடியாத மாற்றத்திற்கு தள்ளப்பட்டது.

இதனிடையே பத்திரிகையாளர் பேட்டியில் ஸ்மித் கூறியதாவது “கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியானது டி20 போட்டிகளின் நீட்டிக்கப்பட்ட பதிப்பாக உள்ளது, அதனால் உலக கோப்பைக்கு முன்பாக டி20 போட்டிகளில் கலந்துகொண்டு தன்னை தயார்படுத்திக் கொள்வேன், ஐபிஎல் தொடர் உலகத்தின் முதன்மையான டி20 தொடர், எனவே அங்கு பங்கேற்பதன் மூலம் சிறந்த பயிற்சி கிடைக்கும்” என்று தெரிவித்தார்

கடந்த சில மாதங்களாக ஸ்மித், கனடா மற்றும் கரீபியன் லீக் போட்டிகளில் பங்குபெற்று தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஐபிஎல் போட்டிகளிலும் ஸ்மித் பங்குபெற்று உலக கோப்பைக்கு முன் தகுந்த பயிற்சியை பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பை அடுத்த ஆண்டு மே 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்க உள்ளது.

கடந்துவந்த ஒன்பது மாத தடை காலத்தைப் பற்றி கூறிய ஸ்மித் “நான் பல ஏற்றங்களையும் சறுக்கல்களையும் சந்தித்துள்ளேன், கடந்த வந்த நாட்கள் கருப்பு நாட்களாகவே இருந்தது, கூடவிருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கஷ்ட காலத்தில் உதவி புரிந்தனர்” என்று தெரிவித்தார்.

“இந்த ஒன்பது மாதங்களில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன், கிரிக்கெட்டில் இருந்து சற்று விலகி இருந்ததால் புத்துணர்ச்சியுடனும் எந்தவித குழப்பங்களும் இல்லாமல் இருக்கிறேன், எனவே வரும் காலங்களில் கிரிக்கெட்டில் ஈடுபட இது பெரிதும் உதவும்” என தெரிவித்தார் ஸ்மித்.

மேலும் தென்னாப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய நிகழ்வுக்கு முன் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஸ்மித் “நான் டிரெஸ்ஸிங் ரூமை கடக்கும்போது சில வேண்டாத விஷயங்கள் கண்ணுக்கு தெரிந்தன, அதை தடுக்க என்னிடம் சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் அதை நான் செய்யவில்லை. நான் அதை தடுத்திருந்திருக்க வேண்டும். தவறு என்னுடைய வழிகாட்டுதலில்தான்.” என்று தெரிவித்தார்

தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய தொடரை பற்றி ஸ்மித் கூறியதாவது “இந்த தொடருக்கு முன் பல தோல்விகளை சந்தித்திருந்தது ஆஸ்திரேலிய அணி, நான் நினைத்திருந்தாலும் என்னால் அணிக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டிருந்தது, சற்று கடினமாக இருந்தாலும், கடந்த வாரம் பெர்த்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆடியதை பார்த்து பெருமை அடைந்தேன்” என்று கூறினார்.

தற்காலிக கேப்டனாக உள்ள டிம் பெய்னை புகழ்ந்த ஸ்மித் “டிம் பெய்னின் கேப்டன்ஷிப் நன்றாக உள்ளது, ஆரம்பத்தில் சற்று தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை அவர் சந்தித்திருந்தாலும், சிறப்பாகவே செயல்பட்டுள்ளார் பெய்ன் “ என்று கூறினார்