"டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்பொழுதும் தான் தான் ராஜா" என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து வருகிறார் ஆஸ்திரேலியாவின் 'ஸ்டீவ் ஸ்மித்'. பந்தை சேதப்படுத்தியதன் விளைவாக ஒரு ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அரங்கில் தற்போதைய 'ஆஷஸ்' தொடர் மூலம் அடி எடுத்து வைத்தார் ஸ்மித். முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்தார்.
குறிப்பாக இங்கிலாந்து ரசிகர்களின் கேலி, கிண்டல்களுக்கு இடையே அவர் மனம் தளராது சதம் அடித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் முதல் 2 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் இந்த ஆஷஸ் தொடரில் வெறும் 3 இன்னிங்ஸ்களில் 378 ரன்கள் குவித்துள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தர வரிசையில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்கு தள்ளி 2-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் இந்திய கேப்டன் 'விராட் கோலி'க்கும் இவருக்கும் இடையே வெறும் 9 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் 'ஜோ ரூட்' 9-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அதே சமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சக இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரோரி பர்ன்ஸ் ஆகியோர் முறையே 26, 30 மற்றும் 64-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளனர். மேலும் இந்திய அணி வீரர் 'புஜாரா', ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளார்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவின் 'பேட் கம்மின்ஸ்' 914 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மேலும் இவர் ஆல்-ரவுண்டர் வரிசையிலும் 5-வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் முடிந்த 'லார்ட்ஸ்' டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இங்கிலாந்து அணியின் புயல் வேகப் பந்து வீச்சாளர் 'ஜோஃப்ரா ஆர்ச்சர்' டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதன்முறையாக நுழைந்து 83-ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சாளர் 'ரவிந்திர ஜடேஜா' 5-வது இடத்தையும், சக சுழற்பந்து வீச்சாளர் 'ரவிச்சந்திரன் அஸ்வின்' 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி வீரர்களும் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். நான்காவது இன்னிங்சில் அபார சதமடித்து அசத்திய இலங்கை கேப்டன் 'கருணரத்னே' நான்கு இடங்கள் முன்னேற்றம் கண்டு 8-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 'டாப் 10' பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ள இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 'அகிலா தனஞ்செயா' தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் 46-ஆம் இடத்தை எட்டியுள்ளார். மேலும் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் 'அஜாஸ் பட்டேல்' 61-ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
முன்னணி அணிகள் பலவும் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளதால் நாம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் அதிரடியான பல மாற்றங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.