1988- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6- ந் தேதி ஒரு சாதாரண ஏஜென்சியில் பணியாற்றும் செக்யூரிட்டியான தந்தைக்கு மகனாய் பிறந்தார், இந்த ஜடேஜா. பின்னாளில் வளர்ந்து இந்திய துணைக்கண்டத்திற்கே பெருமை சேர்க்கும் அளவுக்கு உயர்வார் என்று ஒரு போதும் அவரது தந்தை நினைத்திருக்க மாட்டார்.
இளமை கால வாழ்க்கை:
சிறு வயதில் தன் தந்தை மீது மிகுந்த பயத்தை கொண்டிருந்தார், ஜடேஜா. கிரிக்கெட் விளையாட தொடங்கிய ஆரம்ப நாட்களில் இவரது குடும்பத்தின் வறுமை இவரை பெரிதும் வாட்டியது. தொடர்ந்து பள்ளி கிரிக்கெட்டில் விளையாடியதால், பின்னாளில் 14 வயதுக்குட்பட்டோருக்கான சௌராஷ்டிரா அணியில் இடம் கிடைத்தது. மேலும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான அணியிலும் இடம் கிடைத்தது. தொடர்ந்து கூச் பெகார் டிராபி மற்றும் வினோ மன்கத் டிராபியில் விளையாடியதால், ஒரு நல்ல ஆல்ரவுண்டராக இவரை செதுக்கியது. மாநில அளவிலான கிரிக்கெட்டில் விளையாடிய போதும் இவரது எண்ணம் தேசிய அணிக்காக விளையாடுவதிலேயே இருந்தது. 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் வாய்ப்பு கிடைத்ததால், முழு கவனத்தையும் தொடர் முழுவதும் செலுத்தியது இவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்டது. இவரது ஆல்ரவுண்ட் திறமையால் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது. அந்த தொடர் இவருக்கு ஒரு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. அதே ஆண்டில் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் ஜடேஜா.
உள்ளூர் போட்டிகள்:
2006 - 2007-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற துலிப் டிராபியில் மேற்கு மண்டலத்திற்கான அணி மற்றும் சௌராஷ்ட்ரா அணிக்காக ரஞ்சி டிராபியிலும் பங்கு பெற்றார். இடம்பெற்றார். மீண்டும் 2008ஆம் ஆண்டு மலேசியாவில் துவங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில், தொடர் வெற்றிகளால் இந்திய அணி இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை சந்தித்தது. இவரது பவுலிங் மற்றும் பீல்டிங் திறமையால் உலக கோப்பையை வென்றது இந்திய அணி. அந்த ஆட்டத்தில் இவர் 5 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். 2007-2008 -ல் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 48 விக்கெட்களை கைப்பற்றியதால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய சீனியர் அணிக்காக விளையாட அழைக்கப்பட்டார். அந்த தொடரின் கடைசி போட்டியில் தான் இவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. எதிர்பாராவிதமாக,அந்த போட்டியில் இந்திய அணி தோற்றது. 2008- இல் ஐபிஎல் முதலாவது சீசன் தொடங்கியது. அந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் அணியின் கேப்டனான ஷேன் வார்னே இவரை, “ராக்ஸ்டார்” என்று அழைத்தார். 2012ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். சென்னை அணி நிர்வாகம் இவரை 2 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தது. மேலும் அந்த சீசனில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரரும் இவரே. அந்த ஆண்டு இவரின் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஏனென்றால், இந்தியாவிற்காக ஒரு சிறந்த இளம் ஆல்ரவுண்டரை அந்த ஐபிஎல் தொடர் உருவாக்கி தந்தது.
நம்பர் 1 பவுலர்:
2017-ஆம் வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இவரது பங்கு போற்றத்தக்கது. அந்த தொடரில் முழுதும் விளையாடிய இவர், 12 விக்கெட்களை சாய்த்து, தொடரின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 33* ரன்களும் 2 விக்கெட்களும் கைப்பற்றி இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார். அந்த தொடரின் ‘தங்க பந்து’ விருதையும் வென்றார். அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஐசிசியின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பெற்றார். பிறகு இந்திய அணியின் அனைத்து அளவிலான கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராகவும் திகழ்ந்தார். சர்வதேச அளவில் ஒரு சிறந்த ஆல்- ரவுண்டராக தன்னை நிரூபித்த வண்ணமே இருந்தார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு, இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹலின் வருகையால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி பல சாதனைகள் புரிந்து கொண்டிருந்தார்.
திருப்பத்தை ஏற்படுத்தினார் :
இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயமடைந்ததால் அணியில் ஏற்பட்ட இழப்பை ஈடு கட்டினார், ரவீந்திர ஜடேஜா. அந்த தொடரின் சூப்பர் 4 மேட்சில் வங்கதேச எதிரான ஆட்டத்தில் 10 ஓவர்கள் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். அணியில் இடம்பெற்ற வேறு எந்த சுழல் பந்து வீச்சாளரும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இது அவருக்கு ஒருநாள் போட்டிகளில் ஒரு சிறந்த கம் பேக்காக இருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இவர் 25 ரன்கள் குவித்தது, இந்திய அணியை தோல்வியில் விளிம்பில் இருந்து தப்பிக்க வைத்தது. அந்த தொடரின் நான்கு போட்டிகளில் விளையாடிய இவர் 7 விக்கெட்களையும் 48 ரன்களையும் குவித்தார். பின்னர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது சர்வதேச முதல் சதத்தையும் பதிவு செய்தார். தொடர்ந்து அனைத்து 3 வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் இவர் இடம் பெற வேண்டும் என பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்புகின்றனர். பல்வேறு தடைகளை தாண்டி,அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் நிச்சயம் அணியில் இடம் பெறுவார்.