தற்போது நமது இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும், நமது இந்திய அணி கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நமது இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில், சுனில் கவாஸ்கர் மொத்தம் மூன்று முறை இரட்டை சதம் விளாசியுள்ளார்.
நமது இந்திய வீரர்கள் யாரும் இவரது இந்த சாதனையை இன்று வரை முறியடிக்கவில்லை என்பது தான் உண்மை. சர்தேசாய், சித்து, வீக்கஸ், மற்றும் விராட் கோலி ஆகிய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, டெஸ்ட் போட்டியில் ஒரே ஒரு முறை மட்டும் இரட்டை சதம் விளாசி உள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தது இல்லை. ஆனால் சுனில் கவாஸ்கர் மட்டும் தான் மூன்று முறை இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அதை பற்றி இங்கு காண்போம்.
#1) சுனில் கவாஸ்கர் ( 236 ரன்கள் )
1983 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி, நமது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரின் 6-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்களான, ஹெய்னஸ் மற்றும் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய டுஜோன், 62 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் ஆன, மார்ஷல் 38 ரன்களும், ஹோல்டிங் 34 ரன்களும் அடித்து கை கொடுத்தனர். இறுதியில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 313 ரன்கள் அடித்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சித்து மற்றும் வெங்கசர்கார் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள், ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன் பின்பு வந்த சுனில் கவாஸ்கர், சிறப்பாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். மிகவும் நிதானமாக விளையாடிய சுனில் கவாஸ்கர், 425 பந்துகளில் 236 ரன்கள் அடித்தார். இதில் 24 பவுண்டரிகளும் அடங்கும். இவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய ரவி சாஸ்திரி, 72 ரன்கள் விளாசினார். இறுதியில் நமது இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 451 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது. பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சிறிது நேரத்தில் ஐந்து நாட்கள் முடிவு பெற்றதால், இந்த போட்டி டிராவில் முடிந்தது.
#2) சுனில் கவாஸ்கர் ( 220 ரன்கள் )
1971 ஆம் ஆண்டு நமது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு, சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரின், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் நமது இந்திய அணி சிறப்பாக விளையாடி 360 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய சுனில் கவாஸ்கர் 120 ரன்களும், சர்தேசாய் 75 ரன்களும் விளாசினர். பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி 526 ரன்கள் குவித்தது. டேவிஸ் மற்றும் ஜோபெர்ஸ் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர்.
கவாஸ்கரின் சிறப்பான இரட்டை சதத்தால், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 427 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் மிகவும் நிதானமாக விளையாடிய சுனில் கவாஸ்கர், 529 பந்துகளில் 220 ரன்கள் அடித்தார். இதில் 22 பவுண்டரிகளும் அடங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 261 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில், 165 ரன்கள் அடித்து இருந்த நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. எனவே இந்த போட்டி டிராவில் முடிந்தது.
#3) சுனில் கவாஸ்கர் ( 205 ரன்கள் )
1978 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி நமது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய சுனில் கவாஸ்கர் 205 ரன்கள் விளாசினார். இதில் 29 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். இவரது சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 424 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த காளி சரான், 187 ரன்கள் விளாசினார். இதில் 25 பவுண்டரிகளும் அடங்கும். அதன் பின்பு இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. எனவே இந்த போட்டி டிராவில் முடிந்தது.