வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் உள்ளடக்கிய குறுகியகால தொடரை முடித்தபிறகு, இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டது. சர்வதேச டெஸ்ட் சேம்பியன்ஷிப்பில் இவ்விரு அணிகளும் பங்கேற்கும் முதல் போட்டியும் இதுவே. அதன்படி, நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணியில் ஆல்ரவுண்டர் அஸ்வின் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ரவீந்திர ஜடேஜாவுக்கு மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வினை போலவே இளம் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை.
இந்த தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், அஸ்வினை அணியில் இணைக்காத விராட் கோலியின் முடிவு ஆச்சரியம் அளிப்பதாக கூறியுள்ளார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 60 விக்கெட்டுகளை 21.85 என்ற மிகச்சிறந்த பௌலிங் சராசரியை வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பேட்டிங்கில் நான்கு முறை சதங்களை கண்டுள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் இடம் பெறாமல் உள்ளார். கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் பங்கேற்ற நிலையில் காயம் காரணமாக மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகினார். ஒட்டுமொத்தமாக இந்த வருடத்தில் ஒரு சர்வதேசப் போட்டியிலும் கூட இதுவரை அஸ்வின் களம் இறங்கவில்லை.
கடந்த முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அஸ்வின் இரு இன்னிங்சிலும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது, 120 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருந்த இந்திய அணியை தனது பேட்டிங் மூலம் மீட்டு எடுத்துள்ளார். தற்போது வரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், இதுவரை 342 விக்கெட்களை குவித்துள்ளார்.
இந்த போட்டியின் போது வர்ணனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுனில் கவாஸ்கர் கூறியதாவது,
"இந்த போட்டியில் இந்திய அணி தேர்வு எனக்கு ஆச்சரியம் ஊட்டுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சாதனை மன்னனாக இருந்த அஸ்வின், இந்தப் போட்டியின் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. இது அதிர்ச்சி அளிக்கிறது. ஆச்சரியமூட்டுகிறது"
என்றார்.
சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 250 மற்றும் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற தனிப்பெரும் சாதனையை படைத்துள்ளார், அஸ்வின். கடந்த 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அவற்றின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடிய அஸ்வின் பேட்டிங்கில் இரு சதங்கள் உட்பட 235 ரன்களை குவித்திருந்தார்.
பந்துவீச்சில் அசத்திய அஸ்வின் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக, தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குறுகிய கால போட்டிகளில் உடல் தகுதி காரணமாக புறக்கணிக்கப்பட்டு வரும் அஸ்வின், தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் புறக்கணிக்கப்படுவது அவரின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சற்று ஏமாற்றமாய் அமைந்து வருகிறது.