தமிழக அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஹிமாச்சல் பிரதேசத்திடம் லீக் சுற்றில் தோற்று காலிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
தமிழகம் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் அணிகள் மோதும் லீக் போட்டி டிசம்பர் 22 அன்று தர்மசாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முகுந்த் மற்றும் ஜெகதீசன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய அப்ரஜித் மற்றும் தமிழக கேப்டன் இந்திரஜித் நிலைத்து விளையாட ஆரம்பித்தனர். இவர்களது பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் தமிழக அணிக்கு வந்தது. பின்னர் 27வது ஓவரில் ராகவ் தவான் வீசிய பந்தில் இந்திரஜித் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் மொத்தமாக 77 பந்துகளில் 30 ரன்களை அடித்தார்.
நிதானமாக விளையாடிய அப்ரஜித் தனது அரை சதத்தை விளாசினார். 40வது ஓவரில் ஜெய்ஸ்வால் வீசிய பந்தில் அமித் குமாரிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 103 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 53 ரன்களை அடித்தார்.நிதானமாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கும் 31 ரன்களில் குலேரியா வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அபிஷேக் தன்வர் பொறுமையாக விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களை அடித்தது. ஹிமாச்சல் பிரதேசம் அணி சார்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹிமாச்சல் பிரதேசம் அணியில் அதிகபட்சமாக ராகவ் தவான் 71 ரன்களும் , கெங்டா 43 ரன்களும் , அன்கிட் கல்சா 144 ரன்களும் , ரிஷி தவான் 75 ரன்களையும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
ஹிமாச்சல் அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 463 ரன்களை அடித்தது. தமிழக அணி சார்பாக நடராஜன் 5 விக்கெட்டுகளையும் , முகமது மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணியில் முகுந்த் மற்றும் இந்திரஜித் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதமடித்தனர். முகுந்த் 128 ரன்களும், இந்திரஜித் 108 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர். விஜய் சங்கர் தனது பங்கிற்கு அரை சதத்தை அடித்தார். தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்களை அடித்தது. ஹிமாச்சல் அணிக்கு 111 ரன்கள் இழக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஹிமாச்சல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெய்னஸ் மற்றும் ராகவ் தவான் சிறப்பாக விளையாடி இலக்கை அடைந்தனர். இந்தப்போட்டியில் 6 விக்கெட்டுகள் மற்றும் 75 ரன்களை குவித்து சிறப்பாக தனது ஆல்ரவுண்டர் ஆட்டத்திறனை வெளிபடுத்திய ரிஷி தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஹிமாச்சல் பிரதேசம் அணி இந்த வெற்றியின் மூலம் 22 புள்ளிகளை பெற்றுள்ளது. தமிழக அணி இப்போட்டியில் தோற்று 12 புள்ளிகளில் உள்ளது. தமிழக அணி இந்தாண்டு ரஞ்சி சீசனில் 7 போட்டிகளில் பங்கேற்று 1வெற்றியும் , 2 தோல்வியும் , 4 போட்டிகளில் டிராவும் செய்துள்ளது. இதனால் தமிழக அணி காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்பை இழந்துள்ளது.