கேதார் ஜாதவ் காயத்திலிருந்து மீண்டுள்ளதால் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட முதன்மை இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை என பிசிசிஐ உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் கேதார் ஜாதவிற்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவர் உலகக் கோப்பை தொடரில் இடம்பெறுவது கேள்விக்குறியாக இருந்தது. 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி லீக் போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது வலதுகை பேட்ஸ்மேன் கேதார் ஜாதவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.
இருப்பினும் மே 22 அன்று இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாந்த் கேதார் ஜாதவ் முழு உடற்தகுதி பெற்று உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுவிட்டார் என தெரிவித்தார். முதலில் வந்த தகவலின்படி கேதார் ஜாதவ் இங்கிலாந்திற்கு தாமதமாக செல்வார் எனவும், உலகக் கோப்பையில் முதலில் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளதால் 22ம் தேதி இங்கிலாந்திற்கு கிளம்ப உள்ள இந்திய அணியுடனேயே கேதார் ஜாதவும் செல்வார் எனவும், ஆரம்ப போட்டிகளிலிருந்தே இவர் பங்கேற்பார் என்வும் கூறப்பட்டுள்ளது.
கேதார் ஜாதவ் தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளதால் ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்பட்ட அதே இந்திய அணியுடன் உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. ஒருவேளை கேதார் ஜாதவ் காயத்திலிருந்து மீளாமல் இருந்திருந்தால் இந்திய அணியின் காத்திருப்பு வீரர்களாக ரிஷப் பண்ட், அம்பாத்தி ராயுடு, அக்ஸர் படேல், இஷாந்த் சர்மா, நவ்தீப் சைனி ஆகியோரில் ஏதேனும் ஒருவர் இடம்பெற்றிருப்பர்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் 2019 உலகக் கோப்பை தொடர் மே 30 அன்று தொடங்க உள்ளது. சொந்த மண்ணின் மைந்தர்கள் இங்கிலாந்து அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணி முதல் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளது. ஆரம்ப போட்டியிலேயே மிகவும் வலிமை வாய்ந்த இரு அணிகள் மோதவிருப்பதால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு சிறிது கூட பஞ்சமிருக்காது.
இவ்வருட உலகக் கோப்பை தொடர் சற்று மாறுபட்ட விதத்தில் நடைபெற உள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரில் இரு குழுக்களாக அணிகள் பிரிக்கப் படவில்லை. அனைத்து அணிகளும் ஒவ்வொரு முறை லீக் சுற்றில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதியில் வெல்லும் அணிகள் ஜீலை 14 அன்று உலகக் கோப்பையின் அடையாளமாக திகழும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பலபரிட்சை நடத்தும். லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 5 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் நடைபெற்று உள்ளன.
14வது உலகக் கோப்பை சீசனில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முழு வலிமையுடன் திகழ்கிறது. 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி ஓடிஐ கிரிக்கெட்டில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. 2011ல் தனது சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு உலகக் கோப்பை அபூர்வமாக எட்டா கனியாக உள்ளது.
இந்திய அணியின் இறுதி உலககோப்பை அணி
ரோகித் சர்மா, ஷீகார் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால், ஜாஸ்பிரிட் பூம்ரா, முகமது ஷமி