இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30 அன்று தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பையின் இந்திய அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டது போது அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். பெரும்பாலான ரசிகர்கள் அம்பாத்தி ராயுடு உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சமீபத்தில் இந்திய சர்வதேச அணியில் இடம் பிடித்த விஜய் சங்கர் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தேர்ந்தவராக இருப்பதால் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் தக்க நேரம் இது.
இலங்கையில் நடைபெற்ற நிதாஷா டிராபியில் ஹர்திக் பாண்டியா-விற்கு ஒய்வு அளிக்கப்பட்டதால் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் தமிழ் நாட்டை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் துவண்டு விடாமல் இந்தியா-ஏ மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தார். இந்திய அணி நிர்வாகமும் இவருக்கு பக்கபலமாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, இந்திய அணிக்கு இரண்டாவது வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை தயார் செய்தது. சமீபத்தில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விஜய் சங்கரை டாப் ஆர்டரில் களமிறக்கியது. விஜய் சங்கர் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்கு அளித்தார். தொடர்ந்து சொதப்பி வந்த அம்பாத்தி ராயுடுவை இந்திய அணி உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை. அவருக்கு பதிலாக விஜய் சங்கர் இடம் பெற்றார்.
விஜய் சங்கர் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாவது: ஒருவர் மற்றொருவரின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் மனிதாபிமானமே அவர்களை மென் மேலும் ஊக்கப்படுத்தி சாதிக்க வைக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு மிகவும் உதவி செய்துள்ளது. தற்போது எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் அளவிற்கு தன் ஆட்டத்தை மெருகேற்றியுள்ளதாக விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.
" நான் நியூசிலாந்து தொடரில் 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்மீது வைத்துள்ள அதிக நம்பிக்கையினால் மட்டுமே இதனை என்னால் செய்ய முடிந்தது. இதுவே எனக்கு அதிக ஊக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய அணி எனக்கு அளித்த முக்கியத்துவத்திற்காக தற்போது எவ்வகையான மைதானங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அளவிற்கு என் கிரிக்கெட் திறன் மேம்பட்டுள்ளது.
மேலும் எனது குறையாக அனைவராலும் பார்க்கப்படும் பௌலிங்கை தற்போது மேம்படுத்தி வருவதாக விஜய் சங்கர் கூறி தனது நேர்காணலை முடித்தார். விஜய் சங்கர் இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேனாக உலகக் கோப்பையில் களமிறக்க வாய்ப்புள்ளது. இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை சவுத்தாம்டன் மைதானத்தில் ஜீன் 5 அன்று சந்திக்க உள்ளது. இதற்கிடையில் விஜய் சங்கர் முழு நம்பிக்கையுடன் கூறியிருப்பது இந்திய அணியின் வலிமையை மேலும் அதிகரித்ததுள்ளது.