ஐபிஎல் தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு முதல் மிகப் பிரம்மாண்டமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த ஐபிஎல் தொடரில் வருடம் தோறும் பல சுவாரசியமான விஷயங்கள் நடக்கும்.
அந்த அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத தொடர் தான், இந்த ஐபிஎல் தொடர். முன்னணி அதிரடி வீரர்களின் அதிரடியை காணும் பொழுது மிக பிரமிப்பாக இருக்கும். எனவே தான் ஐபிஎல் தொடரில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மொத்தம் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளனர்.ஆனால் ஒரு சில அணிகள் இன்னும் ஒரு முறை கூட இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. அந்த அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் முன்னணி நட்சத்திர வீரர்கள் பலர், இந்த பெங்களூர் அணிக்காக தான் விளையாடி வருகிறார்கள். குறிப்பாக அதிரடிக்கு பெயர் போன ஏபி டி வில்லியர்ஸ் இந்த அணியில் தான் விளையாடுகிறார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு தலைசிறந்த வீரர்கள் இந்த அணியில் இருந்தாலும், ஒரு முறை கூட இந்த அணி ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
#2) டெல்லி கேப்பிடல்ஸ்
ஐபிஎல் தொடரில் அதிர்ஷ்டமில்லாத அணிகளில் டெல்லி அணியும் ஒன்று. தற்போது டெல்லி அணியில் பல முன்னணி நட்சத்திர வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில், டெல்லி அணி ஒருமுறை கூட இறுதிப் போட்டி வரை முன்னேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணி அரையிறுதி வரை முன்னேறி தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் தவான், டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாட இருக்கிறார். பந்துவீச்சில் ரபாடா மற்றும் கிறிஸ் மோரிஸ் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் டெல்லி அணியில் உள்ளனர். பேட்டிங்கில் ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் தவான் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே டெல்லி அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#3) கிங்ஸ் லெவன் பஞ்சாப்
பஞ்சாப் அணியும் ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியில் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரும் மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தனர். அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் அதிரடிக்கு டேவிட் மில்லர் உள்ளார். பந்துவீச்சில் ஷமி மற்றும் டை ஆகிய இருவரும் உள்ளனர். எனவே பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான வீரர்களை கொண்டுள்ளதால், இந்த முறை கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்க உள்ளது பஞ்சாப் அணி.