பல திறமையான இளம் வீரர்கள் மற்றும் அதிரடி வீரர்கள் மற்றும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் பங்கேற்று விளையாடும் ஒரு தொடர் தான், இந்த ஐபிஎல் தொடர். ஐபிஎல் தொடரானது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நமது இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், இந்த ஐபிஎல் தொடரானது தொடர்ந்து 11 வருடமாக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ( 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 226/3 ( 20 ஓவர்கள் )
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 88/10 ( 13.4 / 20 ஓவர்கள் )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயில் ஆகிய இருவரும் களமிறங்கினர். பெங்களூர் அணிக்கு இருவரும் மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்பு விராட் கோலி 32 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த ஏபி டிவில்லியர்ஸ் முதல் பந்தில் இருந்தே தனது அதிரடி ஆரம்பித்தார். அதிரடியாக 4 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசிய ஏபி டி வில்லியர்ஸ், 24 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இறுதிவரை வெளுத்து வாங்கிய கிறிஸ் கெயில், 57 பந்துகளில் 117 ரன்கள் விளாசினார். இதில் 12 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. பஞ்சாப் அணியில் அக்சார் படேல் மட்டும் 21 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும், ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். இறுதியில் பஞ்சாப் அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 88 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே பெங்களூர் அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
#2) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ( 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 263/3 ( 20 ஓவர்கள் )
புனே வாரியர்ஸ் – 133/9 ( 20 ஓவர்கள் )
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், புனே வாரியர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் தில்சன் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே வெளுத்து வாங்கிய கிறிஸ் கெயில், 66 பந்துகளில் 175 ரன்கள் விளாசினார். இதில் 17 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் விளாசிய வீரர் மற்றும் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனைகளைப் படைத்தார் கிறிஸ் கெயில். கிறிஸ் கெயிலின் அதிரடியால் பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவில் 263 ரன்கள் குவித்தது.
264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் புனே வாரியர்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ராபின் உத்தப்பா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். புனே அணியின் சார்பில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் 41 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் எதுவும் அடிக்கவில்லை. 20 ஓவர்களின் முடிவில் புனே அணி, வெறும் 133 ரன்கள் மட்டுமே அடித்து, 130 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.