தற்போது இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நமது இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தலை சிறந்த அணியாக விளங்குவதற்கு முக்கிய காரணம் நமது இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் தான்.
நமது இந்திய அணியில் எப்போதும் பேட்ஸ்மேங்களுக்கு பஞ்சம் இல்லை. இவர்களில் பலர் சிறப்பான சாதனைகளை கிரிக்கெட் அரங்கில் படைத்துள்ளனர். அப்படி சிறப்பாக விளையாடி 10 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன்களை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#1) சச்சின் டெண்டுல்கர் ( 18,426 ரன்கள் )
சர்வதேச கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். இவரது சிறப்பான விளையாட்டின் மூலம் இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை சச்சின் டெண்டுல்கர் “கிரிக்கெட்டின் கடவுள்” என்று தான் அழைக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு காரணம், சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் படைக்காத சாதனைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவர் இதுவரை 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் அவர் குவித்த மொத்த ரன்கள் 18,426 ஆகும்.
#2) சவுரவ் கங்குலி ( 11,221 ரன்கள் )
சவுரவ் கங்குலி என்றாலே அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு காலகட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கங்குலி, சிக்சர்களை வெளுத்து வாங்குவார். இவர் அதிரடியாக விளையாண்டாலும், டெஸ்ட் போட்டியிலும் பல சாதனைகளை புரிந்துள்ளார். இவர் மொத்தம் 308 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் இவர் மொத்தம் 11,221 ரன்களை குவித்துள்ளார்.
#3) ராகுல் டிராவிட் ( 10,768 ரன்கள் )
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். இவ்வாறு சொல்வதற்கு காரணம் அவர் அவ்வுளவு எளிதில் அவுட்டாகாமல், அணிக்கு சுவர் போல் நிற்பார். பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் இவரது ஸ்டிரைக் ரேட் 40 க்கும் கீழ் தான் இருக்கும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறும்போது இவர்தான் பொறுமையாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை செய்து வந்தார். இவர் இதுவரை 340 ஒரு போட்டிகளில் விளையாடி 10,768 ரன்களை குவித்துள்ளார்.
#4) விராட் கோலி ( 10,533 ரன்கள் )
தற்போது உள்ள இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் விராட் கோலிதான். அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார் விராட் கோலி. அதுவும் குறிப்பாக குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இவர் இதுவரை 222 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 10,533 ரன்களை குவித்துள்ளார்.
#5) தோனி ( 10,240 ரன்கள் )
நமது இந்திய அணியின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர் தோனி மட்டும்தான். தற்போது இவருக்கு 36 வயது தாண்டிவிட்டது. ஆனால் இந்த வயதிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் தோனி. ஆனால் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை சில வருடங்களுக்கு முன் அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் தான் விளையாடி வருகிறார். இவர் மொத்தம் 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 10,240 ரன்களை குவித்துள்ளார்.