ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், T 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. வரும் 6ம் தேதி நடக்க உள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. முன்னதாக நடந்த நான்கு நாள் பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரை கைப்பற்ற முழுவீச்சில் களமிறங்கி உள்ளது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி. ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களான ஸ்மித்தும் வார்னேரும் இல்லாமல் பலம் குறைந்து காணப்படுவதால், இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா. பல முன்னணி வீரர்கள் இந்தியாவிற்கு சாதகமான தொடராய் அமையுமென்று கருத்து கூறி இருந்தாலும், வரலாறை திருப்பி பார்த்தால் அது ஆஸ்திரேலியாவிற்கே சாதகமாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் விராட், ரோஹித் சர்மா, புஜாரா, முரளி விஜய் போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இஷாந்த் சர்மா, முஹம்மது ஷமி என்று வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். ஆனால் இந்த 18 பேரில் இரண்டே பேர் தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அந்நிய மண்ணில் வெற்றியை சுவைத்துள்ளனர். 10 வருடத்திற்கு முன் பெர்த்தில் நடந்த போட்டியில் இஷாந்த் ஷர்மாவும், 15 வருடத்திற்கு முன் அடிலெய்டில் நடந்த போட்டியில் பார்திவ் பட்டேலும் வெற்றிபெற்ற அணியில் இருந்துள்ளனர். இருப்பினும் மற்ற வீரர்களில் சிலர் ஆஸ்திரேலியாவில் விளையாடி போதிய அனுபவம் பெற்றுள்ளனர். விராட் கோஹ்லி 8 போட்டிகளிலும், உமேஷ் யாதவ் 7 போட்டிகளிலும் மற்றும் தமிழக வீரர் அஸ்வின் 6 போட்டிகளில் விளையாடியுள்ளனர். கடைசியாக ஆஸ்திரேலியாவில் பங்கேற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை.

கடந்த நான்கு மாதங்களில் இரண்டு வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 2-1 என்றும், இங்கிலாந்திற்கு எதிராக 4 - 1 என்றும் தோல்வியுற்றது. இந்த தோல்விகளுக்கு பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததே காரணமாக கூறப்பட்டது. பௌலர்கள் அவர்களது திறனை சரியாக பயன்படுத்தி வருகின்றனர். மிட்ச்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹஸ்ஸில் வுட் என்று அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளது ஆஸ்திரேலிய அணி. அவர்களை போன்று இந்திய அணியிலும் சிறப்பாக பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர்கள் உள்ளனர். குறிப்பாக ஷமியின் ரிவேர்ஸ் ஸ்விங்கை விளையாட பேட்ஸ்மேன்கள் திணறிவருகின்றனர்.

சென்ற முறை சென்ற இந்திய பௌலர்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஒரு சிறந்த குழுவாகவே காணப்படுகிறது. இருப்பினும் இம்முறை இடம் பெற்றுள்ள பௌலர்களின் சராசரி மோசமான நிலையில் தான் உள்ளது. இஷாந்த் சர்மாவின் பௌலிங் சராசரி 62.15 எனவும், அஸ்வினின் சராசரி 54.71 எனவும், யாதவின் சராசரி 43.96 என்பன கவலை அளிக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் போனால் பிறகு இது போன்ற வாய்ப்பு மீண்டும் அமைய சில காலங்களாகும் என்பதால், விராட் கோஹ்லி தலைமையிலான அணி சிறப்பாக செயல்பட்டு வரலாறை மாற்றி அமைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.