2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால் இங்கிலாந்து நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. தொடரை நடத்தும் அணியான இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு இதுவரை மூன்று முறை உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறிய போதிலும் ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றது இல்லை. இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் கோப்பையை வெல்லும் அணிகளாக கணிக்கப்பட்டுள்ளன. 1975ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பெருமைமிகு உலக கோப்பையில் 11 தொடர்கள் நடைபெற்று உள்ளன. அவற்றில், குறிப்பிடத்தக்க வகையில் தொடரின் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஜொலித்த ஐந்து பேட்டிங் செயல்பாடுகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5.விவியன் ரிச்சர்ட்ஸ் குவித்த 138 ரன்கள்:
1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் இடம்பெற்ற பல பந்துவீச்சாளர்களும் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் அற்றல் பெற்றிருந்தனர். அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான கார்டன் கிரீனிட்ஜ், ஹெயின்ஸ், கள்ளிச்சரண் மற்றும் கேப்டன் கிளைவ் லாயிட் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தவித்த வேளையில், அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் களம்புகுந்தார். இவர் சக வீரரான கோலீஸ் உடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் இன்னிங்சை கட்டமைத்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சரமாரியாக எதிர்கொண்டு சதம் அடித்து 286 ரன்கள் என்ற ஸ்கோரை வெஸ்ட் இண்டீஸ் அணி எட்ட உதவினார். இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
#4.அரவிந்த டீ சில்வா குவித்த 107 ரன்கள்:
1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சந்தித்த அர்ஜுன ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 242 ஆஸ்திரேலிய அணி குவித்திருந்தது. அதன் பின்னர், களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவிலேயே தங்களது விக்கெட்களை இழந்த போதிலும் அரவிந்த டீ சில்வா 107 ரன்களை குவித்து முதல் முறையாக இலங்கை அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். உலக கோப்பை இறுதி ஆட்டங்களின் வரலாற்றில் ஒரு முக்கிய டேட்டிங் செயல்பாடாக இது அமைந்தது.
#3.கிளைவ் லாய்ட் குவித்த 102 ரன்கள்:
முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. தொடரின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் குவித்தது. இன்னிங்ஸின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்த போதிலும் கேப்டன் கிளைவ் லாயிட் சக வீரரான ரோகன் உடன் இணைந்து உருவாக்கிய பார்ட்னர்ஷிப்பில் 149 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சினை எதிர்கொண்டு 2 சிக்சர்கள் 12 பவுண்டரிகள் உட்பட 102 ரன்களை கேப்டன் கிளைவ் லாய்ட் குவித்திருந்தார். அதன் பின்னர், களமிறங்கிய இயான் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 274 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம், முதலாவது உலக கோப்பை தொடரில் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை படைத்தது, வெஸ்ட் இண்டீஸ் அணி.