கிரிக்கெட் போட்டிகளில் களத்தில் இருக்கும் வீரர் தேவையான ரன்களை குவிப்பது வழக்கம். ஆனால் அந்த ரன்கள் ஓடி மட்டுமே எடுக்கப்படுவதில்லை. நான்கு மற்றும் ஆறு ரன்களாக பவுண்டரி மூலமாகவும் பெறப்படுகிறது. வீரர் ஒருவர் அதிகமாக ரன்கள் ஓடி எடுக்கும் பட்சத்தில் அவர் விரைவில் களைப்படைந்து விடுவார். அதனால் அவரால் பேட்டிங் செய்வது கடினமாக மாறிவிடும். காரணம் அவரது முழு சக்தியையும் ரன் ஓடுவதிலேயே செலவிடுவதால் விரைவில் சோர்வடைந்து விடுவார். ஆனால் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆடம் பெரோரி என்ற வீரர் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 96 ரன்கள் விளாசினார். அதுவும் ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அதைப்பற்றிய முழுத்தொகுப்பை இங்கு காணலாம்.
1994 ஆம் ஆண்டு வில்ஸ் உலக தொடர் என்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 54 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது போட்டி மழையின் காரணமாக ட்ராவானது.
மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் ரூதர்போர்டு பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி நியூசிலாந்து வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரர்களான யங் 5 ரன்னிலும், ஹார்ட்லேஸ் 8 ரன்னிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான ஆடம் பெரோரி கேப்டன் ரூதர்போர்டு உடன் ஜோடி சேர்ந்தார்.
பவுண்டரியே இல்லாமல் 96 ரன்!!!
இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரூதர்போர்டு ஒருபுறம் ஆக்ரோஷமாக ஆட மறுமுனையில் பெரோரி நிதானமாக ஆடினார். இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தனர். ஆடம் பெரோரி பவுண்டரி அடிப்பதில் கவனம் செலுத்தாமல் அனைத்து பந்துகளையும் அடித்து ரன்களை ஓடி எடுத்தார். பவுண்டரி செல்லவிருந்த பந்துகளையும் இந்திய வீரர்கள் லாவகமாக தடுத்ததால் அவரால் பவுண்டரியே அடிக்க முடியாமல் போனது . நிதானமாக ஆடிய அவர் துர்தஷ்டவசமாக 96 ரன்களில் இருந்த போது பிரபாகரன் வீசிய பந்தில் அனில் கும்பிளே-விடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் அவர் பவுண்டரியே அடிக்காமல் சதமடித்த வீரர் என்ற சாதனையை 4 ரன்களில் தவறவிட்டார். இருந்த போதிலும் இவர் அடித்த 96 ரன்களே இன்றளவும் பவுண்டரியே அடிக்காமல் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இறுதியில் நியூசிலாந்து அணி 269 ரன்கள் குவித்தது. இந்திய அணி 48.1 ஓவர்களில் 271 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
அந்த போட்டியில் ஆடம் பெரோரி 138 பந்துகளில் 96 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அவரது ஸ்ரைக்ரேட் 69.56 ஆகும்.