கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வம் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டு போகுமே தவிர ஒருநாளும் குறையப் போவதில்லை. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த கிரிக்கெட் விளையாட்டை ஒரு கை பார்த்துவிட பெண்களும் தற்போது அதிக ஈடுபாட்டுடன் களமிறங்கி விட்டனர்.
உலக அளவில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் போர் 1934 ஆம் ஆண்டே தொடங்கி விட்டாலும் கடந்த சில காலமாகத் தான் பெண்கள் கிரிக்கெட் அதிகம் பேசப்படுகின்றது. மொத்தமாக 50 நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடை பெற்று வந்தாலும் 10 அணிகள் தான் டெஸ்ட் எனப்படும் 5 நாள் போட்டியில் ஆடத் தயாராக இருக்கின்றன.
ஆண்கள் கிரிக்கெட்டுக்கு அளவுக்கு ரசிகர்கள் இல்லை என்றாலும் பெண்கள் கிரிக்கெட் போட்டி பலராலும் விரும்பப் படுகின்றது. ஸ்பான்ஸர்கள் மற்றும் விளம்பரதாரர்களும் அதிகமாகவே கிடைக்கின்றன. உலகக் கோப்பை போட்டிகளும் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இங்கே நாம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகில் ஜொலிக்கும் 5 பெண் வீராங்கனைகளைப் பற்றிக் காண்போம்.
#5 சனா மிர்
முப்பத்தி மூன்று வயதாகும் சனா மிர் பாகிஸ்தானின் முக்கிய பவுலர்களில் ஒருவர். ஐசிசி ஒருநாள் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் பாகிஸ்தான் வீராங்கனை. அணியின் கேப்டனாக செயல்பட்டு 36 போட்டிகளில் 17 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். 2005 முதல் தன் நாட்டிற்காக விளையாடி வரும் அவர் ஆசியப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்கள் (2010,2014) வாங்கிக் கொடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இதுவரை 217 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
#4 சாரா டெய்லர்
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் ஆண்கள் அணிக்காக விளையாடிய முதல் வீராங்கனை ஆவார். மிடில் ஆர்டரில் பேட் செய்யும் அவர் சிறந்த ஐசிசி T20 விருதினை மூன்று முறையும் (2012, 2013, 2018) சிறந்த ஒருநாள் போட்டிக்கான ஐசிசி விருதை ஒரு முறையும் (2014) பெற்றுள்ளார். துடிப்பான விக்கெட் கீப்பரான இவர் 122 கேட்ச் மற்றும் 100 ஸ்டம்ப்பிங் சாதனையையும் தன் வசம் ஆக்கியுள்ளார்.
3 மித்தாலி ராஜ்
பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்படும் இந்தியா கேப்டன் மித்தாலி ராஜ் இருபது ஓவர் போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர். 2017 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 7 இன்னிங்ஸ்களில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இந்திய அணியில் வெற்றிகரமான கேப்டனான இவர் அதிக ரன்கள் குவித்த சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார். கிரிக்கெட் விமசகர்களால் உலகின் தலைசிறந்த பெண் கிரிக்கெட் வீரர் என்று புகழப்படுகிறார்.
#2 எல்லிஸ் பெரி
தனது 16 வயதில் முதல் ஐசிசி போட்டியை விளையாடி விட்டார் இந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் வீராங்கனை. உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிய பெண் என்ற பெருமையையும் பெற்றார். இரண்டு துறைகளில் ஜொலித்தாலும் பெரிக்கு விருப்பம் ஜென்டில்மேன் விளையாட்டு என்றழைக்கப்படும் கிரிக்கெட்டில் தான். 2010 AFC தொடருக்காக பரிசீலிக்கப்பட்ட போதும் ஐசிசி T20 ஐத் தேர்வு செய்தார்.
1 ஸ்மிரிதி மந்தனா
இந்திய இளம் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா(22) ஐசிசி யின் சிறந்த வீராங்கனை விருதை 2018 ல் பெற்றார். இடதுகை ஆட்டக்காரராக இவர் உலக அளவில் அதிகம் விரும்பப்படும் வீராங்கனை. 44 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 3 சதம் மற்றும் 13 அரை சதங்களையும் விளாசியுள்ளார். U 19 போட்டிகளில் இவர் அடித்த 224 (150) மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
நன்றி: காலித் இம்ரோஸ்