இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே தொடரை வென்று வென்று விட்ட இந்திய அணி இந்தப் போட்டியிலும் வென்று, அசாத்திய சாதனை படைக்க தயாராக உள்ளது. அப்படி வென்றுவிட்டால் அது இந்திய அணிக்கு மிகச் சிறப்பான நாளாக அமையும். அதனைத் தாண்டி இந்தியாவின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மாவிற்கு, வென்றாலும் தோற்றாலும் இது சிறப்பான நாளாக அமைய போகிறது.
ஏனெனில் இவர் தற்போது நாளைய ஒருநாள் போட்டி ரோகித்திற்கு 200வது ஒருநாள் போட்டியாகும். தற்போது வரை 199 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் நாளை நடைபெற உள்ள நியுஸிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தனது 200வது ஒருநாள் போட்டியில் கால் தடம் பதிப்பார்.
இந்த 200 ஒருநாள் போட்டிகளில் ஆட ரோகித்சர்மா கடந்து வந்த பாதையை கொஞ்சநஞ்சமல்ல. அவற்றில் கற்களும், முட்களும், தடைகளும், ஏற்றங்களும், இறக்கங்களும் அனைத்தும் நிறைந்த ஒரு கடினமான பாதையாகவே அமைந்துள்ளது. கடந்த நான்கு வருடமாக ரோஹித் சர்மாவின் அபார ஆட்டத்தையும், அவரது அசுரத்தனமான இரட்டை சதங்களையும் நாம் பார்த்து வருகிறோம். அவர் அசால்டாக இரட்டை சதங்களை விளாசும் போதுமிக எளிதாக ரோஹித் சர்மா ஆடுகிறார் என்று நமக்கு தோன்றும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று ரோஹித் சர்மா தனது பேட்டியில் அடிக்கடி கூறியுள்ளார்.
2006-ம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பை தொடருக்கான அணியில் ஒரு வீரராக பங்கேற்றவர் தான் இந்த ரோகித் சர்மா. அப்போது அவரது திறமை இந்தியாவின் பலருக்கும் தெரியாமல் இருந்தது. அந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. அந்த அணியில் ரோகித் சர்மா, சட்டேஸ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா போன்ற இன்றைய கால வீரர்களும் நிறைந்திருந்தனர்.
அந்தப் போட்டியில் பெரிதாக ரன் ஏதும் எடுக்காத ரோகித் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தியாவும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்தது. அப்படியிருந்தும் ரோகித் சர்மாவின் கதவுகள் மூடப்படவில்லை.
அவரது பார்வை சர்வதேச கிரிக்கெட் பக்கம் திரும்பியது. தேர்வுக்குழுவும் அவர் மீது ஒரு கண் வைத்திருந்தது. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரது பெயர் இடம்பெற்றது. அவரது திறமைக்காக அவர் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் மும்பை அணிக்காக முதல் தர போட்டியில் ஆடி வந்த அவர் கிட்டத்தட்ட 60 ரன்கள் சராசரி வைத்திருந்தார். திறமையை தாண்டி அவரது கடின உழைப்பும் இங்கு இடம்பெற்றது.
முதல் போட்டியில் பெரிதாக ஏதும் அவரால் சாதிக்க முடியவில்லை. ஆனால் அதே வருடம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரிலும் அவர் பெயர் இடம் பெற்றது .
இங்குதான் ரோகித் சர்மாவின் எழுச்சி துவங்கியது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு முக்கியமான போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.
வெறும் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி கடுமையாக திணறியது. அடுத்ததாக வந்த ரோகித் சர்மா பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை மெதுவாக தட்டிக் கொண்டு சென்றார். 10 ஓவர்களில் வெறும் 57 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்து இருந்தது .
பின்னர் ராபின் உத்தப்பா அவருடன் கைகோர்த்து நிதான ஆட்டத்தை தொடங்கிய ரோகித் சர்மா 20 ஓவர்களின் முடிவில் 40 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் இந்திய கேப்டன் தோனியுடன் சேர்ந்து 56 ரன்கள் அடித்து நொறுக்கினார். இத்தனைக்கும் அப்போது அவருக்கு வயது 20. இந்த ஆட்டத்தை பார்த்து ரோஹித்தின் திறமையை உலகமே அறிந்தது.
அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் மேல் வாய்ப்பாக வந்து குவிந்தது. இந்திய அணியின் கேப்டன் தோனி அவருக்கு பக்கபலமாக இருந்து அவருக்கான வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருந்தார். வலைப்பயிற்சியில் நன்றாக ஆடும் அவர் ஏதோ ஒரு காரணத்தால் சர்வதேச போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் திணறினார்.
இப்படியாக ஐந்து வருடங்கள் கடந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி மீண்டும் ரோகித் சர்மாவிற்கான ஒரு இடத்தை ஏற்படுத்தி தந்தார். அதுதான் துவக்க வீரருக்கான இடம். 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முரளி விஜய்க்கு பதிலாக ரோகித் சர்மாவை துவக்க வீரராக களம் இறக்கினார் மகேந்திர சிங் தோனி.
இந்த நகர்வு இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஒரு நகர்வாக அமைந்தது. ரோஹித் சர்மாவுக்கும் கிரிக்கெட்டில் மிகப் பெரிய உந்துதலாக அமைந்தது. அந்த துவக்க வீரர் இடத்தை சரியாக பற்றிக்கொண்ட ரோஹித், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரன்களாக விளாசினார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் இலங்கை அணிக்கு எதிராகவும் துவக்க வீரராக இரட்டை சதங்கள் அடித்து துவம்சம் செய்தார்.
இப்படியாக தற்போதுவரை 5 போட்டிகளுக்கு ஒருமுறை சதங்களை விளாசி பல சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது வரை 199 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 7799 ரன்களை விளாசியுள்ளார். இதன் சராசரி 48.14 ஆகும் ஸ்ட்ரைக் ரேட் 88.61 ஆகும். மேலும் 22 சதங்களும் 3 இரட்டை சதங்களும் 39 அரை சதங்களும் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 264 ரன்கள் குவித்து தள்ளியுள்ளார். இத்தனை சாதனைகளை படைத்து தனது 200ஆவது போட்டியில் களம் காணும் ரோஹித் சர்மாவிற்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.