ஐ.பி.எல். தொடரில் இதுவரை கடைசி ஆறு சீசனில் டெல்லி அணி முதல் நான்கு இடங்களுக்குள் வந்ததே இல்லை. இந்த ஆண்டு புது பெயர், புது ஜெர்சியுடன் களமிறங்குகிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஐ.பி.எல். தொடரில் முதலில் சில தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்தது டெல்லி அணி. முதல் இரண்டு தொடரில் சேவாக், கம்பீர், டி வில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் விளையாடி வந்தனர். ஐ.பி.எல். தொடரில் ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு செல்லாத ஒரே அணி டெல்லி அணி.
2012-ஆம் ஆண்டு பீட்டர்சன், வார்னர், ரஸ்ஸல் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தது. அதற்குப் பிறகு விளையாடிய அனைத்து தொடர்களிலும் மோசமான ஆட்டத்தால் ப்ளேஃஆப் சுற்றுக்குக் கூடத் தகுதி பெறாமல் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான வீரர்கள் சரியாக விளையாடாமல் ஏமாற்றம் அளித்தது டெல்லி அணிக்கு பெரும் இழப்பாக இருந்தது.
ஒவ்வொரு ஆண்டு சிறப்பான வீரர்கள் இருந்தும் சரியான டீம் காம்பிநேசன் அமைக்க முடியாமல் இருந்து வந்தது டெல்லி அணி. இதுவரை 162 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 67 வெற்றி, 92 தோல்வி, 3 போட்டிகள் முடிவு இல்லாமல் போனது. 2015-ஆம் ஆண்டு ஏலத்தில் யுவராஜ் சிங் 16 கோடிக்கு எடுக்கப்பட்டார். ஆனால் அந்த ஆண்டு 248 ரன்கள், சராசரி 20-க்கும் குறைவு. 2016-ஆம் ஆண்டு பவன் நெகி 8.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. 8 போட்டிகளில் 57 ரன்கள், ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பல வீரர்கள், பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டு, புது அணியாக விளையாடி வந்த டெல்லி அணி இந்த ஆண்டு இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களம் காண்கிறது. டெல்லி அணிக்கு இளம் வயதில் கேப்டனான ஐயர் கடந்த ஆண்டு இரண்டாம் பாதியில் கேப்டன்ஷிப், பேட்டிங் என இரண்டிலும் கலக்கியுள்ளார். டெல்லி அணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக பயிற்சியாளராக பாண்டிங், ஆலோசகராக கங்குலி ஆகியோரை நியமித்துள்ளது.
இந்த ஆண்டு இளம் வீரர்களான ரிஷப் பண்ட், பிரிதீவ் ஷா, தவான், காலின் மன்றோ, காலின் இங்க்ராம் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கும் விதமாக உள்ளனர். ஆல்ரவுண்டர்களான மோரிஸ், அக்சர் படேல் மற்றும் ஹிட்டிங் பவுலிங்கில் கலக்கவுள்ளார். அனுபவம் வாய்ந்த அமித் மிஸ்ரா மற்றும் இளம் ஸ்பின்னர்கள் சந்தீப் லமிச்சான், ராகுல் டிவாட்டியா, அக்சர் படேல் ஆகியோர் ஸ்பின் பவுலிங்கில் மிரட்டவுள்ளனர். உலகின் சிறந்த வேக பந்துவீச்சாளர்களான டிரென்ட் போல்ட் மற்றும் ரபாடா ஆகிய இருவருமே ஃபாஸ்ட் பவுலிங்கில் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளனர்.
இந்த தொடரில் டெல்லி ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டு இருப்பது ப்ளேஃஆப் சுற்றில் டெல்லி அணி விளையாடுவது தான். ரசிகர்களின் எண்ணத்தை நிறைவேற்ற டெல்லி அணியின் 11 வருட கனவை இந்த ஆண்டு இளம் வீரர்கள் கொண்ட டெல்லி அணி நிறைவேற்றுமா?
எழுத்து- நவ்யாஷ் பண்டாரி
மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்