இந்தியா , ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இருப்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது. இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் சரி அல்லது டிரா ஆனாலும் சரி இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று உலகச்சாதனையை படைக்கும். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி சிட்னி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளுக்குமே சிட்னி டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக வருட தொடக்கத்தின் முதல் டெஸ்ட் தொடர் சிட்னி மைதானத்தில் நடத்துவதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழக்கமாக கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் "பின்க் டெஸ்ட்" எனவும் அழைக்கப்படுகிறது.
2009ல் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்கா அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதிய டெஸ்ட போட்டியே முதல் பின்க் டெஸ்ட் ஆகும். அப்பொழுது முதல் தற்போது வரை பாரம்பரியமாக பின்க் டெஸ்ட் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறும் 11வது பின்க் டெஸ்ட் ஆகும்.
பின்க் டெஸ்ட் என அழைக்கப்பட காரணம் ?
அனைத்து வருட ஜனவரி மாதமும் புதுவருட டெஸ்டாக சிட்னி மைதானம் ஒரு பினக் கடல்போல் காட்சியளிக்கும். இந்த டெஸ்ட் போட்டி முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மற்றும் நியூ சவுத் வேல்ஸ்-ஐ சேர்ந்த "க்ளன் மெக்ராத்"-இன் மனைவி "ஜானி மெக்ராத்"-இன் நினைவாக நடத்தப்படுகிறது. அத்துடன் இந்த டெஸ்ட் போட்டியில் வசூலாகும் மொத்த தொகையும் மெக்ராத் அறக்கட்டளைக்கு சென்றடையும்.
மெக்ராத் அறக்கட்டளையானது மார்பக புற்றுநோய் மறுவாழ்வு மையமாகவும் , கல்வி அறக்கட்டளை-யாகவும் ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வருகிறது. சிட்னியில் நடைபெறும் வருடத்தின் முதல் டெஸ்ட போட்டியில் கிடைக்கும் தொகை மெக்ராத் மார்பக நல மையத்தை நாடு முழுவதும் மேம்படுத்தவும் , இந்த நோயினை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும் உதவுகிறது. தற்போது ஆஸ்திரேலியா முழுவதும் 120 இடங்களில் மார்பக புற்றுநோய் நல மையம் நிறுவி 67000 குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறத மெக்ராத் அறக்கட்டளை.
மெக்ராத் அறக்கட்டளையானது 2005ல் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் மற்றும் ஜானி மெக்ராத் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. ஜானி மெக்ராத் 2005ல் தான் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தார். பின்னர் மூன்று வருடங்களுக்கு பிறகு ஜானி மெக்ராத் இறந்துவிட்டார். அவரது நினைவாக இறந்த அடுத்த வருடத்திலிருந்து தொடர்ச்சியாக பின்க் டெஸ்ட் நடத்தப்பட்டு வருகிறது.
சிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் "ஜானி மெக்ராத் நாளாக" கடைபிடிக்கபடுகிறது. அந்த நாளில் கிரிக்கெட்டில் கிடைக்கும் முழு தொகையும் "மெக்ராத் அறக்கட்டளைக்கு" அனுப்பி வைக்கப்படும். அத்துடன் அன்றைய நாளில் ரசிகர்களும் பின்க் ஆடை அணிந்து வந்து தங்களது ஆதரவை தெரிவிப்பர். விளையாட்டு வீரர்களும் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் வீரர்கள் பேட்டின் கைப்பிடி பின்க் கலராகவும் , பின்க் ஸ்டிக்கர் ஒட்டியதாகவும் காணப்படும்.
கிரிக்கெட்டிற்கு பயன்படுத்தப்படும் ஸ்டம்புகளும் பின்க் கலராகவே காட்சியளிக்கும்.அத்துடன் அந்நாளில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் அமரும் இருக்கை கொண்ட இடத்தை "ஜானி மெக்ராத்" ஸ்டான்ட் என தற்காலிகமாக பெயர் மாற்றம் செய்யப்படும். மேலும் அந்நாளில் விளையாடும் இரு அணிகளுக்கும் பின்க் தொப்பியை மெக்ராத் தனது கரங்களால் அளிப்பார்.
இது ஒரு நல்ல முயற்சியாக மெக்ராத் அறக்கட்டளைக்கு உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் முழு ஒத்துழைப்பை இந்த முயற்சிக்கு அளிக்கிறது.