2010 ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, அந்த ஆண்டிற்கான லீக் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆப்கான் அணியால், தகுதி சுற்றை தாண்டி செல்ல முடியவில்லை. இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் பெரிதாக எந்த தாக்கத்தையும் சர்வதேச அளவில் ஆப்கான் அணியால் இயற்றமுடியவில்லை. இருப்பினும் ஒரு சில வீரர்கள் தங்களது திறமையை சரியாக வெளிப்படுத்தினர். நல்ல பயிற்சியும் உறுதுணையும் இருந்தால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திக்காட்டினார்.
2013 ஆம் ஆண்டு ஐசிசியால் அனைத்து சர்வேதேச போட்டிக்கான அஸோஸியேட் மெம்பெர்ஷிப் அந்தஸ்தை அடைந்த ஆப்கான் அணி, 2015 ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தங்கள் அணியின் வீரர்களை நல்ல முறையில் தயார் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடன் இரண்டு வருடம் ஒப்பந்தம் (Memorandum of Understanding) போடப்பட்டது. ஒவ்வொரு வீரரும் தங்கள் திறமைகளை மெருகேத்திக் கொண்டனர். முகமத் நபியின் தலைமையின் கீழ் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி, அனைவரும் எதிர்பார்த்தது போலவே உலகக்கோப்பை விளையாடும் வாய்ப்பை பெற்றது.
லீக் சுற்றில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, அதை தொடர்ந்து மற்ற போட்டிகளில் தோல்வியை சந்தித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. உலகக்கோப்பை முடிந்த உடனே ஆப்கான் கிரிக்கெட் நிர்வாகம் மூலம் அணிக்குள் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அஷ்கர் ஆப்கான் அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இவரது சிறப்பான தலைமையால் ஒரு பெரிய உயரத்திற்கு அவ்வணி சென்றது என்றே கூறலாம். 2016 ஆம் ஆண்டு T20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற வெஸ்ட் இண்டீஸ் லீக் சுற்றில் மற்றும் ஒரே ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தது. அவர்களை வீழ்த்திய பெருமை ஆப்கான் அணியயே சேரும்.
2017 ஆண்டு ஆப்கான் அணியின் பொற்காலமாக அனைவராலும் வெகுவாக கூறப்பட்டது. காயம் காரணமாக சில முன்னனி சீனியர் வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற பழமொழியை போல் கிடைத்த வாய்ப்பை இருக்க பிடித்துக்கொண்டனர். ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான் போன்ற இளம் வீரர்கள் தங்களது சுழல் பந்து வீச்சால் அணியில் நிரந்தர இடம் பிடிக்க தொடங்கினர். 2017 ஆம் ஆண்டிற்கான IPL ஏலத்தில் ஹைதெராபாத் அணியால் நான்கு கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் 18 வயதேயான ரஷீத் கான். அந்த தொடரில் சிறப்பாக பந்து வீசிய ரஷீத் கான், 18 விக்கெட்களை வீழ்த்தி வளர்ந்துவரும் சிறந்த வீரருக்கான கோப்பையை வென்றார். IPL போட்டிகளில் தனது மாயாஜால சுழலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரஷீத், சர்வதேச போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய பெருமை பெற்ற ரஷீத் கான், உலகின் முன்னனி வீரர்களை பின்னுக்குத்தள்ளி பந்து வீச்சாளர்க்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
2018 ஆண்டு நடைபெற்ற IPL ஏலத்தில் ரஷீத் கான் போன்று முஜிபுர் ரஹ்மானும் நான்கு கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவ்விருவரை தொடர்ந்து சாஹிர் கான் என்ற மற்றொரு வீரரும் சுழல் பந்து வீச்சில் கலக்கிவருகிறார். 2019ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு இம்மூன்று வீரர்களும் பக்கபலமாக இருக்கும் பட்சத்தில், தகுதிச் சுற்றை தாண்டி செல்லக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பந்து வீச்சு மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் சில இளம் வீரர்களை கொண்டுள்ள ஆப்கானித்தான் அணி, பின் வரும் காலங்களில் கிரிக்கெட் உலகை ஆட்சி செய்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.