முதல் போட்டிக்கான ஆடுகளத்தில் கண்டிப்பாகப் புற்கள் இருக்கும் - ஆடுகள பராமரிப்பாளர்

ஆடுகள பராமரிப்பாளர் - டேமியன் ஹஃப்
ஆடுகள பராமரிப்பாளர் - டேமியன் ஹஃப்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா தொடர் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டில் தொடங்க உள்ளது. பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்த நிலையில் இந்தியா தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே இந்தியா ஆஸ்திரேலியா களம் காண உள்ள முதல் டெஸ்ட் போட்டி ஆடுகளத்தில் கண்டிப்பாக புற்கள் இருக்கும் என ஆடுகள பராமரிப்பாளர் டேமியன் ஹஃப் கூறியிருக்கிறார். அடிலெய்டில் நடந்த கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகள், இரவு பகல் ஆட்டமாக நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

ஹஃப், இரவு பகல் டெஸ்ட் போட்டிகளுக்கு களத்தில் புற்கள் விடுவது வழக்கம், ஏனெனில் பந்தின் தன்மையே தக்கவைக்க அவ்வாறு செய்யப்படுகிறது. இதைப்பற்றி அவர் கூறியதாவது “ஆடுகளத்தில் எந்த மாற்றமும் இருக்காது, இரவு பகல் ஆட்டத்திற்கு எவ்வாறு களம் உருவாக்கப்படுகிறதோ அதேப்போல் தான் வரும் போட்டிக்கான களம் இருக்கும்.”எனக் கூறினார்

“இதே போன்ற கள மாற்றங்களை, சிவப்பு பந்து மற்றும் பிங்க் பந்து ஆட்டங்களுக்கு, ஷீயீல்டு லெவல் என்று கூறப்படும் உள்ளூர் போட்டிகளில் செயல்படுத்துவது வழக்கம், எனவே வரும் போட்டியிலும் எந்த வித மாற்றமும் இருக்காது” என தெரிவித்தார்.

அடிலெய்டு ஆடுகளத்தில் நடந்த முதல் மூன்று இரவு பகல் டெஸ்ட் போட்டிகளில், முதல் போட்டி மூன்றே நாட்களில் முடிந்தது, இரண்டாவது போட்டி நான்கு நாட்களுக்கு விளையாடப்பட்டது. மூன்றாம் போட்டி மட்டுமே இறுதி நாளில் இறுதி செஷன் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

களத்தில் புற்கள் இருந்தால் இரு அணி வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக அமையும். பந்தும் விரைவில் அடிவாங்காது. பௌலர்க்கு ஏற்ற ஸ்விங் மற்றும் வேகம் புற்கள் இருக்கும் களத்தில் கிடைக்கப்பெறும். இவ்வாறு களம் அமைப்பதன் மூலம் பேட்ஸ்மேனுக்கும் பௌலருக்கும் சமமான ஆட்டத்தை காண முடியும்.

கிரிக்கெட் வரலாற்றில், தொடரிலுள்ள முதல் போட்டியே தொடரின் கருவாக பெரும்பாலும் அமையும். அப்போட்டியில் கிடைக்கப்பெறும் உத்வேகம் மற்ற போட்டிகளுக்கு அச்சரமாக இருக்கும் . எனவே முதல் போட்டியில் இந்தியா வெற்றியை சூடுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை பொறுத்தவரை முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா சமன் செய்தது. இந்த முடிவானது ஏற்றத்தக்கது அல்ல என்று பலரும் வேவ்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியா தொடரை இழந்திருந்தாலும் உண்மையான வெற்றி இந்தியா பக்கமே என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தன.

டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு நடந்த பயிற்சி ஆட்டத்தில் ப்ரித்வி ஷா காயமடைந்தது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது, அதே போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததை கண்டு ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரராக ப்ரித்வி ஷா கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டி தொடரை வென்றதில்லை. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இல்லாதது இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல அரிய வாய்ப்பாக ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த தொடரை இந்தியா கைப்பற்றி சாதனை படைக்க காத்திருக்கிறது.

Quick Links

App download animated image Get the free App now