விராட் கோலி இவரின் பெயரை தெரியாத ஆட்கள் இந்தியாவில் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு தனது கடின முயற்சியால் புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் இவர். இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக விளங்கும் இவர் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை தன்வசமாகியுள்ளார். இன்னும் பல சாதனைகளை முறியடிக்கவும் உள்ளார். ஒரு வீரராக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் சிறப்பாக வழிநடத்தி இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி பெற வைத்துள்ளார். இவர் தற்போது இருக்கும் நிலை அனைவரும் அறிந்ததே. ஆனால் 10 வருடத்திற்கு முன்னாள் இவரை யாருக்கும் தெரியாது. இந்த குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்த இவரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்களை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
#1) தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் ஒழுக்கம்
கிரிக்கெட் போட்டிகளில் ஒருசில போட்டிகளில் விஸ்வரூபம் எடுத்து அதன் பின் அடங்கிப்போன பல வீரர்களை நாம் கண்டதுண்டு. ஒரு சில போட்டிகளின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த இவர்களால் அதன் பின் அந்த இடத்தை நிலை நிறுத்தி கொள்ள முடியாமல் போனதற்கு காரணம் அவர்களிடம் உள்ள முயற்சிக்கும் திறனே. ஒரு முறை தோல்வியை கண்டவுடன் துவண்டுவிடும் எந்த ஒரு வீரராலும் அதன் பின் சாதிக்க முடியாது. அந்த வகையில் விராட் கோலி பல தோல்விகளை கண்டாலும் தனது தன்னபிக்கையை இழக்காமல் போராடியதாலே தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். இவரை ஏன் வைத்துள்ளனர் என்ற எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானார். இருந்தாலும் அதனை கண்டு துவண்டுவிடாமல் வெறித்தனமாக பயிற்சி எடுத்து தனது விடாமுயற்சியுடன் பல சதங்களை விளாசி அவர்களின் வாயாலே சிறந்த வீரர் என்ற வார்த்தையை வரவழைத்தவர் விராட் கோலி. இதன் மூலம் இவரின் விடாமுயற்சி திறனை பற்றி ரசிகர்கள் அனைவரும் அறிவர்.
நன்னடத்தை என்பது கிரிக்கெட் போட்டிகளிலில் மட்டுமல்லாமல் நமது வாழ்க்கையிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பல கிரிக்கெட் ஜாம்பவான்களும் இதனை மைதானத்தில் கடைபிடிக்க தவறுகின்றனர். ஆனால் அந்த விஷயத்தில் விராட் கோலி ஒரு ஜாம்பவானாகவே திகழ்கிறார். இதனை சமீபத்தில் நடந்து முடிந்த உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் இந்திய ரசிகர்கள் ஸ்டீவன் ஸ்மித்-ஐ விமர்சிக்கும் பொது ரசிகர்களை விராட் கட்டுப்படுத்தியதன் மூலமே அனைவரும் அறியலாம்.
" தன்னமிக்கை மற்றும் கடின உழைப்பு உங்களுக்கு கண்டிப்பாக வெற்றியை தேடித்தரும் " - விராட் கோலி
#2) உடல் வலிமை
தற்போது இருக்கும் சூழலில் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடல் வலிமையில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் விராட் கோலி தனது உடலில் மீத அதிக கவனத்தை செலுத்துகிறார். தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்களிலேயே உடலை படு கச்சிதமாக வைத்திருக்கும் வீரர் என்று கூட இவரை சொல்லலாம் அந்த அளவுக்கு உடலின் மீது கவனத்தை செலுத்துபவர் இவர்.
இதுகுறித்து இவர் கூறுகையில் " ஒரு கிரிக்கெட் வீரராக என்னை கருதும் போது உடல் வலிமையை நான் முக்கியமாக ஒன்றாக கருதுகிறேன். ஆரம்ப காலகட்டங்களில் இதை உணராத நான் பின்னாளில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். எனவே மேலும் எனது உடல் பயிற்சியை தீவிர படுத்தினேன். உடல் நன்றாக இருந்தாலே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை நமக்கு தானாக வரும்." என கூறினார்.
" உங்களின் உடல் கச்சிதமாக இருக்கும் போது தன்னால் எதுவும் செய்ய முடியும் என்ற மன நம்பிக்கை தாமாக உங்களுக்கு வரும் " - விராட் கோலி
#3) கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம்
இது தற்போது இருக்கும் பலருக்கு இருப்பதில்லை. தாம் ஒரு நல்ல நிலையை அடைந்த பின்னர் இதற்க்கு மேல் தான் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தலைக்கணம் பலருக்கு வருகிறது. இதுவே அவர்களின் அழிவிற்கு காரணமாக அமைகிறது. ஆனால் விராட் கோலி தான் கிரிக்கெட் உலகத்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற நிலைக்கு வந்துள்ளார். இருந்தாலும் அவர் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளை கற்று கொண்டும், தொடர்ந்து பயிற்சி பெற்று கொண்டும் உள்ளார். இவ்வாறு தொடர்ந்து பயிற்சி பெறுவதன் மூலம் தனது தவறுகளை திருத்தி கொள்ள முடியும். மேலும் தனது பலவீனத்தை பலமாகவும் மாற்ற முடியும் என்பதனை நமக்கு நிருபித்துள்ளார் இவர். இவர் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே வருவதன் மூலமே இவரின் கற்றுக்கொள்ளும் திறனை நாம் அறியலாம்.
" ஒருபோதும் பயிற்சி பெறுவதை நான் நிறுத்தியது இல்லை. ஒரு சர்வதேச வீரராக என்னை கருதும் போது எனக்கு பயிற்சி மிக முக்கியமாக கருதுகிறேன் " - விராட் கோலி