கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'உலகக் கோப்பை கிரிக்கெட்-2019' நேற்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியை நடத்தும் நாடான 'இங்கிலாந்து' அணி இந்த உலகக்கோப்பையை அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது.
இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும், முன்னாள் வீரர்களும் கோப்பையை வெல்வதற்கு 'இங்கிலாந்து' அணிக்கு மிக அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய ஒரு வெற்றியைப் பெற்று உலக கோப்பை தொடரை அட்டகாசமாய் தொடங்கி இருக்கிறது.
நேற்றைய இங்கிலாந்து அணியின் வெற்றியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய விஷயங்களைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
3 ) 'ஜோப்ரா ஆர்ச்சர்'-ஐ தேர்வு செய்தது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 'ராஜஸ்தான் ராயல்ஸ்' அணிக்காக அட்டகாசமாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் 'ஜோப்ரா ஆர்ச்சர்'. ஆனால் உலகக்கோப்பைக்காக இங்கிலாந்து அணி முதலில் தேர்வு செய்த அணியில் இவர் இடம் பெறவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்காக பங்கேற்ற இவர் அட்டகாசமாக பந்து வீசி அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் இறுதி உலகக்கோப்பை பட்டியலில் இடம்பிடித்தார் ஆர்ச்சர்.
நேற்றைய போட்டியில் தென்ஆப்ரிக்க அணியின் 'டாப் ஆர்டரை' உடைத்ததில் இவரின் பங்கு மிகப்பெரியது. அதி அற்புதமாக பந்துவீசிய ஆர்ச்சர் நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் தன்னை அணியில் தேர்வு செய்தது சரிதான் எனவும் நிரூபித்தார்.
2 ) ஏ.பி டிவில்லியர்ஸ்-க்கு மாற்றான வீரரை இன்னமும் கண்டுபிடிக்காத தென்னாபிரிக்க அணி.
நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் எந்த வித போராட்டத்தையும் அளிக்காமல் சரணடைந்தது தென் ஆப்பிரிக்கா.
312 ரன்களை சேஸ் செய்வதற்கான எந்தவித தெளிவான திட்டமும் இல்லாமல் விளையாடியது தென் ஆப்பிரிக்கா. இங்கிலாந்து வீரர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வி அடைந்தது.
இந்த தோல்வியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் 'மிடில் ஆர்டர்' பேட்டிங் வரிசை மோசமான நிலைமையில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது. தென் ஆப்பிரிக்க அணிக்காக மிடில் வரிசையில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் 'டிவில்லியர்ஸ்'. இவரின் ஓய்வுக்கு பிறகு இவரது இடத்தை நிரப்பக்கூடிய அளவுக்கு சிறப்பான ஒரு வீரரை தென் ஆப்பிரிக்க அணி இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நேற்றைய தோல்வியில் தெளிவானது.
1 ) இங்கிலாந்து அணியின் துருப்புச் சீட்டு - பென் ஸ்டோக்ஸ்.
இந்த உலகக் கோப்பையில் மிகச்சிறப்பான கலவையில் வீரர்களை பெற்றுள்ள அணி இங்கிலாந்து. தொடக்க வரிசையில் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ. மேலும் மிடில் வரிசையில் ஜோ ரூட், இயன் மோர்கன், ஜோஸ் பட்லர் போன்ற தலைசிறந்த வீரர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக திகழும் 'பென் ஸ்டோக்ஸ்' சமீப காலமாக எந்த போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் எந்த நேரத்திலும் அபாயகரமான ஒரு வீரராக உருவெடுக்கும் ஸ்டோக்ஸ் நேற்றைய போட்டியில் அதனை செய்தார்.
89 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணியின் ரன் குவிப்புக்கு உதவி செய்த 'ஸ்டோக்ஸ்' பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், நம்ப முடியாத ஒரு கேட்ச்சை பிடித்து அசத்தினார். இவரின் இந்த ஆல்-ரவுண்ட் அசத்தல் தொடரும் பட்சத்தில் இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் முக்கிய துருப்பு சீட்டாக 'பென் ஸ்டோக்ஸ்' இருப்பார்.