பொதுவாக கடைசியாக பேட்டிங்கிற்கு களம் இறங்கும் பந்து வீச்சாளர்கள் அவ்வப்பொழுது சிறப்பாக விளையாடி ரன்களை சேர்ப்பது உண்டு. இத்தகைய வீரர்களுக்கு எப்பொழுதும் அணியில் பெரும் மதிப்பு உண்டு. இவ்வாறு பேட்டிங்கிலும் அசத்தும் பந்துவீச்சாளர்கள் இருந்தால் அது அணிக்கு ஒரு கூடுதல் பலமாகும். இப்படி பேட்டிங்கில் அசத்தும் பந்துவீச்சாளர்களுக்கும் பவுலிங்கில் அசத்தும் பேட்ஸ்மேன்களுக்கும் எப்பொழுதும் தனி மதிப்பு அணியில் இருக்கும், அது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படும்.
பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பேட்டிங் செய்வது எதிரணிக்கு எரிச்சலை தரும். தடுப்பாட்டத்திலும் அடித்து ஆடுவதிலும் சிறந்து விளங்கும் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சதமடிக்க கூடிய மூன்று பந்து வீச்சாளர்கள் குறித்த இத்தொகுப்பில் காண்போம்.
#1.புவனேஸ்வர் குமார்:
ஸ்விங் பந்து வீச்சில் முடிசூடா மன்னராகிய புவனேஸ்வர் குமார் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். சிறந்த முறையில் டேட்டிங் ஆடுவதற்கான உத்திகள் புவனேஸ்வர் குமாரிடம் உள்ளது. வடது கை பேட்ஸ்மேனான புவனேஸ்வர்குமார், திறமையாக மிகவும் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்யக்கூடியவர்.
21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஸ்வர், 22.08 என்ற பேட்டிங் ஆவரேஜ் வைத்துள்ளார். உத்திர பிரதேஷ் வீரரான புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மூன்று அரை சதங்களும் ஒரு நாள் போட்டிகளில் ஒரு அரை சதமும் அடித்துள்ளார் புவனேஸ்வர் குமார். அவருடைய சிறந்த இன்னிங்சானது 2014ஆம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜில் நிகழ்ந்தது. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 552 ரன்கள் குவித்துள்ளார்.
இக்கட்டான சூழ்நிலைகளில் சிறப்பான முறையில் பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார், புவனேஸ்வர் குமார். இவர் மிகப்பெரிய சிக்ஸர்கள் அடிக்கக் கூடிய வீரர் இல்லையென்றாலும் சிறந்த முறையில் நிதானமாக ரன்கள் சேர்கக்கூடிய வீரர் ஆவார். ஆகவே புவனேஸ்வர் குமார் கண்டிப்பாக சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2. பாட் கம்மின்ஸ்:
வேகப்பந்து வீச்சாளரான கம்மின்ஸ் பல முறை ஆஸ்திரேலிய அணிக்காக பேட்டிங்கில் உதவியுள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனான கம்மின்ஸ், 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதங்கள் உட்பட மொத்தம் 586 ரன்கள் அடித்துள்ளார், 19.53 பேட்டிங் ஆவரேஜ் வைத்துள்ளார். 26 வயதான கம்மின்ஸ், இதுவரை 39.54 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்., பேட்டிங்கிலும் சிறந்த பங்காற்றி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 2018-ல் மெல்போர்ன் மைதானத்தில் 63 ரன்கள் எடுத்ததே அவருடைய அதிகபட்ச ரன்கள் ஆகும். எனினும், அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
#3.மெஹதி ஹசன் :
பங்களாதேஷ் அணியின் இளம் வீரரான மெஹதி ஹசன், டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கு உண்டான அனைத்து திறமைகளையும் வைத்துள்ளார். வலது கை பவுலிங் ஆல்-ரவுண்டரான மெஹதி ஹசன், சிறந்த முறையில் பேட்டிங் செய்துள்ளார்.
19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 554 ரன்கள் எடுத்து தனது சராசரியை 18.47 என்ற வகையில் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்துள்ளார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரு அரை சதம் அடித்துள்ளார். பங்களாதேஷ் அணிக்கு ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக எதிர்காலத்தில் திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.