பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா இறுதிநேரத்தில் பெருமூச்சு விட்டிருந்தாலும் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா முழுவீச்சுடன் களமிறங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக ஆஸ்திரேலியா அணி தோல்வியின் விளிம்பில் சிக்கித் தவித்தது. எனவே முதல் டி20 போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா புத்துணர்வு பெற்றுள்ளது.
முதல் டி20 போட்டியில் பல்வேறு மாற்றங்களைக் கண்டது இந்திய அணி, உதாரணத்திற்கு கோலி கே.எல். ராகுலுக்கு மூன்றாவது இடத்தை விட்டுக் கொடுத்தது, சாஹல் அணியில் இல்லாதது எனப் பல்வேறு சர்ச்சைக்குரிய விவாதங்களுக்குக் கோலியின் முடிவு வித்திட்டது.
அந்தத் தவறான முடிவுகளே இந்தியா தோல்விக்குக் காரணம் எனப் பல்வேறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
எனவே 2வது டி20 போட்டியில் இந்தியா செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்களைப் பற்றி இங்குக் காண்போம்.
#1.கோலி தனக்கான இடத்தில் ஆட வேண்டும் (மூன்றாவது )
விராட் கோலி உலகில் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. போட்டிகளில் சேஸ் செய்வதில் அவர் ஒரு ராஜா என்பது அனைவரும் அறிந்ததே.
அவர் ஆட வரும்போது ஆட்டத்தைச் சீரமைத்துக் கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்வார். ஆனால் டி20 போட்டிகளில் பிட்ச்சை ஆராயக்கூடிய நேரம் இருக்காது. அதுவும் நான்காவதாக இறங்கும் பேட்ஸ்மேன் தனது முதல் பந்தில் இருந்தே ரன்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு கோலி நான்காவதாக இறங்கும் பட்சத்தில் சீரமைப்பு என்ற பெயரில் தனது ஆட்டத்தை இழக்கிறார்.
வழக்கமாக இறங்கும் இடத்தில்(மூன்றாவது ) அவர் ஆடினால் தன்னை சீரமைத்துக் கொள்ள சிறிது நேரம் கூடுதலாகக் கிடைக்கும். கோலியும் இதுவரை அப்படித்தான் ஆடி வந்து பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார்.
எனவே, கோலியின் இந்த முடிவானது அடுத்த போட்டியில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2. ஆறாவது பவுலிங் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
பல சமயங்களில் இந்தியா கூடுதல் பௌலர் இல்லாமல் பெரிதும் அடிவாங்கி உள்ளது. முதல் டி20 போட்டியிலும் க்ருனால் பாண்டியா மற்றும் கலீல் அஹமது ஆடுகளத்தில் உள்ள எல்லா திசையிலும் அடிவாங்கிக் கொண்டிருந்த நிலையில், மாற்று பவுலராகக் கோலிக்கு எவரும் கிட்டவில்லை.
பல தொடர்களில் கேதார் ஜாதவ் இப்பணியை திறம்பட செய்துள்ளார். அவர் அணியில் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போதுள்ள அணியில் பண்ட் அல்லது ராகுலை நீக்கிவிட்டு ,வாஷிங்டன் சுந்தரை அணியில் கொண்டுவந்தால் ஓர் கூடுதல் பவுலிங் ஆப்ஷன் இந்தியாவிற்கு கிடைக்கும். இவ்வாறு செய்வதனால் சஹாலை அணியில் எடுக்க இயலாது.
அணி நிர்வாகம் எந்த முடிவை எடுக்கப் போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்!
#3.பீல்டிங்கை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்
கடந்த பல வருடங்களாகப் பில்டிங்கில் முன்னுதாரணமாக இருந்து வருகிறது இந்தியா. ஆனால் கடந்த போட்டியில் இந்தியா பீல்டிங்கில் சொதப்பியது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத சொதப்பல் உலக கோப்பைக்கு முன்னால் தான் வரவேண்டுமா என்று பலரும் ஐயம் கொண்டனர்.
பில்டிங்கில், இந்தியா கேப்டனே கடந்த போட்டியில் சறுக்கல்களை கண்டார். கோலி பீல்டிங்கில் மிக ஆக்ரோஷத்துடன் பந்தைக் கையாள்வார். அவர் கேட்சை தவறிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இந்திய அணி பீல்டிங்கை மேம்படுத்திக்கொண்டு அடுத்த போட்டியில் முழுவீச்சுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கான்செப்ட் : நேசரா வி ஜகன்னாத
எழுத்து : பாஹாமித் அஹமத்