IPL என்ற கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்கு முன்னரே அதனைப் பற்றிய சுவாரஸ்யமும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் எதிர்வரும் ஏலத்திற்காகக் காத்துள்ளனர். பிரண்டன் மக்கல்லம் காட்டிய வானவேடிக்கைக்கு பிறகு இதன் புகழ் உச்சம் பெற்றது என்றே கூறலாம். பல சர்ச்சைகளைத் தாண்டி இன்று அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது இந்தத் தொடர்.
இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல், பல சர்வதேச அணிகளில் இருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால் உலகின் பல நாடுகளில் இந்த தொடர் ஒளிப்பரப்பாகிறது. சர்வதேச வீரர்களை தாண்டி பல நாட்டின் உள்ளூர் அணிக்காக விளையாடும் வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது IPL. இளம் வீரர்கள் மூத்த வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைப்பதால், இது அவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது.
ஒரு நல்ல கேப்டன் அமைந்தாலே அந்த அணிக்கு பாதி வெற்றி கிடைத்த மாதிரி தான். சூழ்நிலைக்கு தகுந்தவாறு நல்ல முடிவை எடுக்கும் தகுதி, அணியில் விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்ய உதவுவது, இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவது போன்றவை நல்ல கேப்டனுக்கான அடையாளம். அப்படி IPL தொடர்களில் சாதித்த 3 கேப்டன்களை பற்றி கீழே காணலாம்.
#3 ஷேன் வார்னே
ஷேன் வார்னே, ஆஸ்திரேலிய அணியின் சுழல் ஜாம்பவான். சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு விளையாடி பல வெற்றிகளை அணிக்கு தேடி தந்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என இரண்டு விதமான போட்டிகளிலும் தன் திறமையை நிரூபித்துவிட்டு IPLல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு அணித்தலைவரானார். சர்வதேச போட்டிகளில் கேப்டனாகும் வாய்ப்பு பெரிதாய் கிடைக்கவில்லை என்றாலும், IPL போட்டிகளில் கிடைத்த அவ்வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். இளம் வீரர்களை கொண்ட ராஜஸ்தான் அணியை முதல் IPL தொடரில் இறுதி போட்டிவரை அழைத்துச் சென்று வெற்றியும் தேடித்தந்தார்.
முதல் IPL தொடரில் மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் பலம் குறைந்த அணியாக கருதப்பட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால் வார்னே அந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் திறம்பட செயல்பட்டார். இவரின் தனித்திறமையாய் கருதப்பட்டது, நல்ல அணித்தேர்வும் விடா முயற்சியும். யூசுப் பதான், ஸ்வப்னில் அஸ்னோட்கர், கம்ரான் கான் போன்ற இளம் வீரர்களின் திறமையை அறிந்து வாய்ப்புக்கொடுத்தார். அவர்களும் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தினர்.
#2 ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா, வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கர் கூறியிருந்தார். உங்களின் இரட்டை சத சாதனையை எந்த இந்திய வீரர் முறியடிப்பார் என்ற நிருபர்களின் கேள்விக்கு ரோஹித் ஷர்மா என்ற சச்சினின் பதில் அன்றைய சமயத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் கூறியதற்கு மேல் ரோஹித் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டை சதங்களை விசையிருக்கிறார். ஹைதெராபாத் அணிக்கு IPL போட்டியில் அறிமுகமாகி பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2013 ஆம் ஆண்டு நடந்த IPL தொடரில் ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலாக பாதியில் அணித்தலைவராக அறிவிக்கப்பட்டார். சச்சின், பாண்டிங் என்று பல ஜாம்பவான்கள் வழி நடத்திய அணியை ரோஹித் தலைமை ஏற்றது இவருக்கு கிடைத்த அங்கீகாரம். அதுவரை பெரிதாய் எதுவும் சாதிக்காத அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றார் ரோஹித் ஷர்மா.
களத்தில் நல்ல துடிப்பு, பௌலர்களை சுழற்சி முறையில் பந்து வீச அழைப்பது, இக்கட்டான கட்டத்தில் அணிக்கு அளிக்கும் பங்கு இவரது தனி திறமை. இதுவரை 6 முறை கேப்டனாக செயல்பட்டு 3 முறை IPL கோப்பையை மும்பை அணிக்காக தட்டிச்சென்றுள்ளார். IPL போட்டிகளில் இவரது வெற்றி சராசரி 59.04 சதவீதமாக உள்ளது. இதுவே இப்பட்டியலில் இவர் இரண்டாம் இடம் பிடிக்க காரணமாக அமைந்தது.
#1 மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி , இந்த பெயருக்கு பின்னால் பல வெற்றிகளும் சாதனைகளும் அடங்கும். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர், இதுவரை இருந்த மற்ற கேப்டன்களை விட சற்று வித்தியாசமானவர் என்றே கூறலாம். 2007 ஆம் நடைபெற்ற முதல் T 20 தொடரில் இந்திய அணியை வழிநடத்தி உலகக்கோப்பையும் பெற்றுதந்தார். அதன் பிறகு சாம்பியன்ஸ் ட்ரோபி மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை என்று கோப்பைகளை வென்று இந்திய அணியை எவரும் தொடமுடியாத உச்சத்திற்கே கொண்டு சென்றார்.
பல இக்கட்டான சூழ்நிலைகளில் மிகவும் பொறுமையாக முடிவெடுக்கக்கூடிய இவரை ரசிகர்கள் கேப்டன் கூல் என்று செல்லமாக அழைக்க தொடங்கினர். எப்பேர்ப்பட்ட அணியை இவரிடம் கொடுத்தாலும் அந்த அணியை தன் சிறப்பான வழிகாட்டுதலின் மூலம் வெற்றி பாதைக்கு அழைத்து செல்வது இவரது தனி திறமைகளில் ஒன்று. இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது சென்ற IPL சீசன். 9 வீரர்களுக்கு மேல் 30 வயதை தாண்டியவர்கள். இதற்காக பல விமர்சனங்களும் சென்னை அணியின் மீது வைக்கப்பட்டது. அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் கூலாக இருந்த தோனி, இதே அணியை வைத்து கோப்பையையும் தட்டிச் சென்றார்.
இதுவரை 7 முறை சென்னை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற தோனி, 3 முறை கோப்பை வென்றும் சாதித்துள்ளார். இவரது வெற்றி சராசரி 61.97% ஆக உள்ளது. இது மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடுகையில் அதிகம். இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு வீரர்களும் இவரது தலைமையின் கீழ் ஒரு IPL போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்பேற்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், இப்பட்டியலில் முதல் இடம் பிடிப்பது ஆச்சரியம் இல்லை.