டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான சாதனை படைத்திருந்தும் அணியிலிருந்து பாதியில் கழட்டிவிடப்பட்ட 3 இந்திய பேட்ஸ்மேன்கள்

Vinoth kambli
Vinoth kambli

கிரிக்கெட் விளையாட்டானது கடந்த 10 வருடங்களில் மாபெரும் உச்சியை எட்டியுள்ளது. இதற்கு காரணம் டி20 வகை கிரிக்கெட்டாக கூட இருக்கலாம். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டானது பழமையானது மற்றும் மிகவும் சுத்தமான தன்மை கொண்டு விளங்குகிறது. எந்த காலத்திலும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பெரும் மரியாதை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கலக்கும் வீரர்கள் சிறந்த மனநிலை, நுட்பமான பேட்டிங் திறன், தனித் திறமை, பொறுமை ஆகியவற்றை தன்னிடத்தில் இயல்பாகவே கொண்டுள்ளார்கள்.

அனைத்தையும் விட டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் பௌலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் ஆகிய இருவருக்கும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த சம அளவு வாய்ப்பாக அமையும். மேலும் இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நேரம் என ஏதும் இல்லை.

கிரிக்கெட் விளையாட்டில் வருடத்திற்கு வருடம் பல சிறந்த ஆட்டத்திறன் கொண்ட வீரர்கள் உருவாகி சர்வதேச அளவிலும் அசத்தி வருகின்றனர்.‌ சில கிரிக்கெட் வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய உச்சத்தை அடையாமல் இருந்தாலும் தங்களது பெயர்களை கிரிக்கெட்டில் சரியாக பதியுமாறு சாதனைகளை படைத்து விட்டு செல்வர். இது உலகின் சில கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்பிருக்கிறது.

இத்தகைய கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் தொடர்களில் அதிகம் பார்த்திருக்க முடியும். இவர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறுகிய காலமாக இருந்தாலும் அளிக்கப்பட்ட சிறிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டவர்கள் என பெயர் பெற்றவர்கள். நாம் இங்கு கடந்த காலங்களில் சிறந்த பேட்டிங்கை டெஸ்ட் போட்டிகளில் வெளிபடுத்தியும் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட 3 இந்திய வீரர்களின் விவரங்கள் பற்றி காண்போம்.

#3 சடகோபன் ரமேஷ்

Sadagoban ramesh
Sadagoban ramesh

1999ல் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரில் சடகோபன் ரமேஷ் விளையாடிய 4 டெஸ்ட் இன்னிங்ஸில் மொத்தமாக 200 ரன்களை குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரது நுட்பமான பேட்டிங் மூலம் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் போற்றப்பட்டார்.

இத்தொடருக்கு அடுத்ததாக நடந்த இலங்கைக்கு எதிரான தொடரிலும் இதே ஆட்டத்திறனை வெளிபடுத்தி 143 ரன்களை விளாசினார். அதிரடி ஆட்டக்காரர் சடகோபன் ரமேஷ், ராகுல் டிராவிட்டுடன் இனைந்து 243 ரன்கள் பார்ட்னர் ஷீப் செய்து விளையாடி இந்திய அணியின் முதல் இன்னிங்சிஸ் ரன்களை உயர்த்தினர்.

1999 டிசம்பரில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் இவருக்கு மிகவும் மோசமாக அமைந்தது. இத்தொடரில் 4 இன்னிங்ஸில் பங்கேற்று வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் 2000 ஆம் ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் அரைசதம் விளாசி மீண்டும் தனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்பினார் சடகோபன் ரமேஷ்.

அதன்பின் இவரது கிரிக்கெட் வாழ்க்கை மேடும் பள்ளமாமுமாக இருந்து வந்தது. அதிரடி தொடக்கத்தை அளித்தாலும் அதனை பெரிய ரன்களாக மாற்ற தவறினார சடகோபன் ரமேஷ். 2001ல் இலங்கைக்கு எதிராக தான் விளையாடிய கடைசி டெஸ்ட் தொடரில் 37.16 சராசரியுடன் 221 ரன்களை குவித்தார். ஆனால் இவர் எதிர்பார விதமாக மீண்டும் இந்திய தேர்வில் இடம்பெறவில்லை.

சடகோபன் ரமேஷ் இந்திய அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 1367 ரன்களை விளாசினார்.

#2 பிரவின் ஆம்ரி

Praveen Ambre
Praveen Ambre

பிரவின் ஆம்ரி உடனடி நட்சத்திர வீரராக இந்திய அணியில் ஜொலித்தார். 1992ல் டர்பனில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸிலேயே அந்நிய மண்ணில் சதம் விளாசி அசத்தினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் தொடர்ந்து சீரனா ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஆனால் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள தவறினார்.

மும்பையில் பிறந்த இவர் தனது அடுத்த 12 டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து 3 அரைசதங்களை விளாசினார். ஆனால் 1993ல் இலங்கைக்கு எதிரான தொடரில் இவரது மோசமான ஆட்டத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிரவின் ஆம்ரி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டும் அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதிக்கவில்லை. இந்தியாவிற்காக 13 டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய இவர் 42.50 என்ற அற்புதமான சராசரியுடன் 425 ரன்களை குவித்தார்.

#1 வினோத் காம்ளி

Vinoth Kambli
Vinoth Kambli

வினோத் காம்ளி ஒரே இரவில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக உருவாகினார். 1993ல் நடந்த டெஸ்ட் தொடரில் வினோத் காம்ளி தன்னுடைய 5வது மற்றும் 6வது டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து இரு இரட்டை சதங்களை விளாசித் தள்ளினார்.

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வினோத் காம்ளி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவர் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் இன்னிங்ஸில் பங்கேற்று 54.20 என்ற அபூர்வமான சராசரியுடன் 1084 ரன்களை விளாசினார்.

இருப்பினும் 1995ல் இந்திய அணியிலிருந்து இவர் கழட்டிவிடப்பட்டார்‌. அதன்பின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய தேர்வுக்குழு இவரைக் கண்டுகொள்ளவில்லை. வினோத் காம்ளி மும்பை அணிக்காக 9965 முதல் தர ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 59.20ஆக பிரம்மிப்பூட்டும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Quick Links

App download animated image Get the free App now